சென்னை:
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யுவராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.  திருநெல்வேலியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி பள்ளி பாளையம் அடுத்த கிழக்கு தொட்டி பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
ரயில் விபத்தில் கோகுல்ராஜ் இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் பள்ளிபாளையம் காவல் துறையினர் விசாரணையை துவக்கினர்.
ஆனால், “காதல் விவகாரத்தால்  கோகுல்ராஜ் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என்று அவரது  பெற்றோரும், சில அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோகுல்ராஜ் சடலம் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கோகுல்ராஜ்
கோகுல்ராஜ்

தொடர்ந்து நடந்த விசாரணையில் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து கோகுல்ராஜ் சம்மந்தப்பட்ட வழக்கு திருச்செங்கோடு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
மேலும், அந்த வழக்கு கொலை வழக்காகவும் மாற்றப்பட்டது. அதன் விசாரணை அதிகாரியாக திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுப்பிரியா நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யுவராஜ் தலைமறைவானர். இதற்கிடையே கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே தலைமறைவான யுவராஜ் அறிக்கை, வாட்ஸ்அப், டிவி பேட்டி என  காவல்துறையினருக்கு  சவால் விட்டு வந்தார். பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
07-1460052773-yuvaraj45
வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்ககோரி யுவராஜ்  நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.  அந்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையே அவர் மீது தொடுக்கப்பட்ட குண்டாஸை நீதிமன்றம் ரத்து செய்தது. தனக்கு ஜாமீன் வழங்க்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை யுவராஜ் நாடினார்.
இன்று அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. திருநெல்வேலியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்து.
அவரது வழக்கறிஞர் ஆனந்த், “ஜாமீன்தாரர்கள் இருவர் நாளை அவருக்கு ஜாமீன் அளிப்பார்கள். இதையடுத்து சட்ட நடைமுறைகள் முடந்து நாளை யுவராஜ் ஜாமீனில் வெளியே வருவார்” என்றார்.