கடந்த ஜனவரி முதல் மார்ச்மாதம் வரையிலான காலாண்டில் தங்கத்தி்ன் இறக்குமதி அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த அளவு தங்கத்தின் இற்ககுமதி அதிகரித்திருப்பது தற்போதுதான் எனவும் கூறப்படுகிறது. ஜனவரி –மார்ச் 2017 வரையிலான காலாண்டில் மட்டும் 230 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 100 டன் தங்கம் இந்தியச் சந்தைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக அறிவித்ததை அடுத்து, டிசம்பர் மாதமே தங்கத்தின் இறக்குமதி எகிறத் தொடங்கி விட்டதாகவும், வர்த்தகத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில், அதாவது பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னருள்ள ஏழு மாதங்களில், 264 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட 2017 மார்ச் வரையிலான அடுத்த 5 மாதங்களில் மட்டும் 360 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பலரும் அவற்றைத் தங்கமாக மாற்றி வைக்க முயற்சித்ததன் விளைவே தங்க இறக்குமதியின் இந்த ஏற்றத்திற்கு காரணம் என்கிறார்கள்.

இதன் மூலம், கருப்புப் பணம் வெள்ளையாக மாறி, பின்னர் மஞ்சள் உலோகமாக உருவெடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இனி, தங்கத்தின் விலையில் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் தற்போதைக்கு இல்லை என்கிறார்கள் வணிகத்துறை சார்ந்த வல்லுநர்கள். ஏப்ரல் 28ஆம் தேதி அக்ஷ்ய திரிதியை வருவதால், தங்கத்தின் விலையும், இறக்குமதியும் தற்போதைக்கு சரிய வாய்ப்பில்லை என்பது அவர்களது கணிப்பு.