கும்பகோணத்தில் மருத்துவர் வீட்டில் கொள்ளை: செவிலியர் ஒருவர் கைது
கும்பகோணம் அருகே மருத்துவர் ஒருவரில் இல்லத்தில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டி பிள்ளையார்கோவில் அருகே செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில், மருத்துவராக உள்ளார். அதே மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் கீதா என்பவர், சமீபத்தில் செல்வராஜிடம் தனக்கு அவசரமாக 5 லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டதாக தெரிகிறது. பணம் கொடுக்க செல்வராஜ் மறுத்த நிலையில், அவரின் வீடு புகுந்து 90 சவரன் நகையை செவிலியர் கீதா கொள்ளையடித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கீதாவை கைது செய்ததோடு, 65 சவரன் நகையையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.