வங்கி மேலாளரை கொல்ல முயற்சி : நகை மதிப்பாட்டாளர் கைது
திருச்சி
திருச்சி மாவட்டம் மணச்ச நல்லூரில் பணிக்கு தாமதமாக வந்ததை மேலதிகாரிக்கு தெரிவித்த வங்கி மேலாளரை நகை மதிப்பீட்டாளர் குடிநீரில் ஆசிட் கலந்து கொல்ல முயன்றுள்ளார்
திருச்சி மாவட்டத்தில் மணச்சநல்லூரில் திருவெள்ளரையில் ஒரு வங்கிக் கிளை அமைந்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட இந்த வங்கிக் கிளையில் கோகிலா என்னும் பெண் மேலாளராக பணி புரிகிறார். அந்தக் கிளையில் இமானுவேல் லூர்து ஜோசப் என்பவர் நகை மதிப்பீட்டளராக பணி புரிகிறார். இமானுவேல் தினமும் பணிக்கு தாமதமாக வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதற்காக கோகிலா கண்டித்தும் இமானுவேல் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் கோகிலா வங்கி மேலதிகாரிகளுக்கு இமானுவேல் குறித்து புகார் அணுப்பி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இமானுவேல் கோகிலாவின் பாட்டிலில் உள்ள குடிநீரில் நைட்ரிக் அமிலத்தை கலந்துள்ளார்.
வாசனையை வைத்து சந்தேகம் கொண்ட கோகிலா காவல்துறையில் புகார் செய்துள்ளார். நேற்று காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் இமானுவேலை கைது செய்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் கோகிலாவைக் கொல்ல நைட்ரிக் ஆசிடை நீரில் கலந்ததை இமானுவேல் ஒப்புக் கொண்டுள்ளார். காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.