கன்வர் (ஹரித்வார்) யாத்ரா : மீண்டும் தங்கச் சாமியார் மேலும் தங்கத்துடன் !!!

டில்லி

ன்வர் யாத்ரா எனப்படும் ஹரித்வார் செல்லும் யாத்திரையில் தங்கச்சாமியார் என அழைக்கப்படும் சுதிர் மக்கர் மீண்டும் கலந்துக் கொண்டுள்ளார்.

டில்லியை சேர்ந்தவர் சுதிர் மக்கர் (வயது 55).  இவர் உடலெங்கும் தங்கநகைகள் அணிந்து வருடாவருடம் டில்லியில் இருந்து ஹரித்வாருக்கு யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.  இவர் உடலேங்கும் தங்க நகைகள் அணிந்திருப்பதால் கோல்டன் பாபா  (தங்கச் சாமியார்) என அழைக்கப்படுகிறார்.

இவர் தனது இளமைப்பருவத்தில் வறுமையில் வாடினார்.  பிழைப்புக்காக ஹரித்வார் சென்று அங்கு நடைபாதையில் ரோஜாச் செடிகளும், துணிமணிகளும் விற்று வந்தார்.  பின்பு ஜீன்ஸ், சர்ட்டுகள், ஜாக்கெட்டுகள் ஆகியவற்றை டில்லியில் பிட்டு என்னும் ப்ராண்டில் விற்று வந்தார்.  கூடவே ரியல் எஸ்டேட் பிசினெஸ்ஸிலும் ஈடுபட்டு பொருள் ஈட்டினார். தற்போது காஜியாபாத்திலுள்ள இந்திராபுரத்தில் ஒரு வசதியான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளார்.  தன் வசதிகளும், வியாபாரமும் பெருகியதற்கு சிவபெருமானின் அருளே காரணம் எனக் கூறுகிறார்.

அவருடைய நகைகளைப் பற்றி, “எனக்கு நகைகள் மீதும், வாகனத்தின் மீதும் பெரும் காதல் உள்ளது.  1972-73 சமையத்தில் 4 தோலா தங்க நகைகள் வாங்கி அணிய ஆரம்பித்தேன்.  அப்போது ஒரு தோலா தங்கத்தின் விலை ரூ.200. (தோலா என்பது 10 கிராம்).  சிறிது சிறிதாக நகைகள் வாங்க ஆரம்பித்தேன்.  நான் இறக்கும் வரையில் இந்த நகைகளை அணிந்துக் கொள்வேன்.  நான் எனது விருப்ப சீடர் ஒருவருக்கு இதை அளித்து விட்டு இறப்பேன்” எனக் கூறுகிறார்.

தற்போது யாத்திரையில் இவர் 21 சங்கிலிகள், 21 கடவுள் படம் போட்ட டாலர்கள், தங்கக் காப்பு ஆகியவைகளோடு தங்கத்தால் செய்யப்பட்ட மேலங்கியும் அணிந்துக் கொண்டுள்ளார்.  அவர் யாத்திரை செய்யும்போது அவருக்காக பிஎம்டபிள்யூ, ஃபார்ச்சுனேர், ஆடி, இன்னோவா போன்ற 16 வாகனங்கள் உடன் செல்கின்றன.  சில வேளைகளில் மேலும் பல சொகுசுக்கார்களை வாடகைக்கு எடுப்பதும் உண்டு.  அவருடைய காவலுக்காக 18 மெய்க்காப்பாளர்கள், எட்டு காவல் வீரர்கள் ஆகியோர் உடன் செல்கின்றனர்.  இவருடைய மொத்த சொத்தின் மதிப்பு ரூ,150 கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது.  இவருக்கு மனைவி, மக்கள் கிடையாது.

இந்த யாத்திரையில் அவருக்கென்று தனி பக்தர் கூட்டமே உள்ளது.  குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என பலரும் அவருடன் வீடியோ, செல்ஃபி எடுத்துக் கொள்வதோடு, காலில் விழுந்து ஆசி பெறுவதும் உண்டு.  அவரும் அனைவருடனும் அன்பாக உரையாடுவது வழக்கம்.

போலிசுக்கு மட்டுமே இவர் யாத்திரைக்கு வருவது சிறிது கஷ்டத்தை அளிக்கிறது.  ”தங்கச் சாமியார் திடீரென பல இடங்களில் தனது யாத்திரைய நிறுத்தி மக்களைச் சந்திப்பார்.  அந்த நேரத்தில் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.  அவர் இத்தனை வாகனங்களுடன் வரும்போது அது மிகவும் கடினமாகவே இருக்கும்.  ஒவ்வொரு யாத்திரையின் போதும் இது நிகழ்கிறது” என காவல்துறை தெரிவிக்கிறது.

இவர் தொடர்ந்து யாத்திரை மேற்கொள்வதாகவும், வரும் 2018ஆம் வருடம் யாத்திரையின் வெள்ளிவிழா ஆண்டாகும் என தெரிவிக்கிறார்.  மேலும் அதிக எடையுள்ள நகைகளை அணிந்துச் செல்வதால் தனது நரம்புகள் பாதிக்கப்படுவதாகவும், ஒரு கண்ணின் பார்வை குறைந்து வருவதாகவும் கூறுகிறார்.  அநேகமாக 2018ஆம் வருடமே இந்த யாத்திரையின் முடிவாக இருக்கும் எனவும் சொல்லுகிறார்.