மும்பை : 70 கிலோ தங்க விநாயகர் வழிபாடு : பாதுகாப்பு தீவிரம்
மும்பை
மும்பை நகரில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 70 கிலோ தங்கத்தில் செய்த விநாயகர் சிலைக்கு வழிபாடு நடைபெறுகிறது.
வட இந்தியாவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒவ்வொரு இடத்திலும் பல விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறும். அத்துடன் விநாயகர் சிலை கரைப்பு விழாக்களும் மிகவும் விமரிசையாக நடைபெறும்.
தற்போது விதம் விதமாக விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவது வழக்கமாகி உள்ளது. உலர் பழங்கள் போன்ற தின் பண்டங்களை வைத்து விநாயகர் சிலை செய்து அதை கரைப்பதற்கு பதில் ஏழை மக்களுக்கு அளித்தது சென்ற வருடம் மும்பையில் நடந்தது.
இந்த வருடம் இன்னொரு வித்தியாசமான விநாயகர் வழிபாடு நடந்து வருகிறது. மும்பையின் கிழக்கு பகுதியில் 70 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. இதைக் காண கூட்டம் அலை மோதுகிறது.
அதனால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் அமைக்கப்பட்டுள்ள தங்க விநாயக்ரை பாதுகாக்க டிரோன்ஸ் என்னும் ஆளில்லா விமானங்களும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.