7 தடகள போட்டிகளை கொண்ட பெண்கள் ஹெப்டத்லான் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான ஹெப்டத்லான் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஸ்வப்னா பர்மான் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். விளையாட்டிற்கு என வழங்கப்படும் தனிப்பட்ட ஷூக்களை அளித்தால் போட்டியின் போது அதிக வலியை அடைய மாட்டேன் என ஸ்வப்னா பர்மன் கூறியுள்ளார்.

SwapnaBarman

இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டிகளில் 45 நாடுகளை சேர்ந்த ன் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்னர்.

இந்நிலையில் 100 மீ. ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீ.ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீ.ஓட்டம் உள்ளிட்ட 7 தடகள போட்டிகளை கொண்ட பெண்கள் ஹெப்டத்லான் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மான் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

இதன் 100 மீ. ஓட்டத்தில் 981 புள்ளிகள் (5வது இடம்), உயரம் தாண்டுதலில் 1003 புள்ளிகள் (முதலிடம்), குண்டு எறிதலில் 707 புள்ளிகள் (2வது இடம்) , 200 மீ. ஓட்டத்தில் 790 புள்ளிகள் (7வது இடம்), நீளம் தாண்டுதலில் 865 புள்ளிகள் (2வது இட் ம்), ஈட்டி எறிதல் 872 புள்ளிகள் (முதலிடம்), 800 மீ. ஓட்டத்தில் 808 புள்ளிகள் (4வது இடம்) என மொத்தமாக 6026 புள்ளிகளை பெற்ற ஸ்வப்னா பர்மான் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

இதையடுத்து 7 போட்டிகளிலும் அதிக புள்ளிகளை பெற்ற ஸ்வப்னா தங்கப்பதக்கத்தையும், சீனாவின் வாங் குயிங்லிங் வெள்ளிப்பதக்கமும், ஜப்பானை சேர்ந்த யூகி யாமசாகி வெண்கலப்பதக்கமும் வென்றனர். ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பெண்களுக்கான ஹெப்டத்லான் பிரிவில் முதன் முதலில் இந்தியாவின் சார்பாக தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமைக்கு ஸ்வப்னா சொந்தக்காரர் ஆனார்.

இந்த வெற்றிக்குறித்து ஸ்வப்னா கூறுகையில் “ தேசிய விளையாட்டு தினத்தில் நான் தங்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும், போட்டியின் போது நான் சாதாரண ஹூக்களை அணிந்தேன். பயிற்சியின் போது அது எனக்கு வலியை அளித்தது. விளையாட்டிற்கு என வழங்கப்படும் தனிப்பட்ட ஷூக்களை அளித்தால் போட்டியின் போது அதிக வலியை அடைய மாட்டேன் “ என கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக சோமா பிஸ்வாஸ், ஷோபா மற்றும் சர்மிளா ஐயப்பா ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் தங்கம் வெல்லவில்லை. 2002ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சோபா மற்றும் பிஸ்வாஸ் வெண்கலப்பதக்கத்தை மட்டுமே வென்றுள்ளனர்.

இதையடுத்து வரலாறு படைத்த, ஸ்வப்னா பர்மானுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த வெற்றி ஸ்வப்னா பர்மானின் திறமையின் எடுத்துக்காட்டு தான். உன்னை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது ’ என குறிப்பிட்டுள்ளார்.