2021 நிதியாண்டில் ஜிடிபியில் 45% சரிவு ஏற்படலாம்… கோல்டுமேன் அறிக்கையில் தகவல்….

டெல்லி:

2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 45% சரிவு ஏற்படலாம் என்று கோல்டுமேன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவின் தாக்கத்தினை குறைக்க நான்காவது முறையாக லாக்டவுன் 4.0 நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் கூட, மறுபுறம் தொழில்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் இன்னும் 100 சதவீத அளவு இன்னும் இயங்கவில்லை.
பெரும்பாலான தொழிற்சாலைகள், தேவையான மூலதன பொருட்கள் பற்றாக்குறையால் இன்னும் முடங்கியே உள்ளன.

இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பல நாட்களாகவே பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் பற்றிய விரிவான அறிக்கையினை வெளியிட்டார். இது குறித்து தனது கருத்தினை கூறியுள்ள கோல்டுமேன் சாச்ஸ், 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்குவிப்பு திட்டம் உடனடியாக பொருளாதாரத்தில் எதிரொலிக்காது. உண்மையில் உலக வங்கி கணிப்பின் படி, மொத்த ஜிடிபி விகிதத்தில் 10 சதவிகிதத்தினை தான் ஊக்குவிப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்றும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

கோல்டுமேன் சாச்ஸ் ஜூன் காலாண்டில் மோசமான செயல்பாடு காரணமாக இந்தியாவின் வளர்ச்சி மிக மோசமான சரிவினைக் காணக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கோல்டுமேன் சாச்ஸ் அறிக்கையில் 2021-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி விகிதத்தில் 45 சதவீத வீழ்ச்சியினைக் காணக்கூடும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இது கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மோசமான வளர்ச்சியினை பதிவு செய்துள்ள நிலையில், ஜூன் காலாண்டில் இப்படி மோசமான வளர்ச்சியினைக் காணக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் காலாண்டில் இப்படி படு வீழ்ச்சி கண்டாலும், செப்டம்பர் காலாண்டில் மிக வேகமாக வளர்ச்சி காணும் என்றும் கோல்டுமேன் சாச்ஸ் மதிப்பிட்டுள்ளது. அதோடு 2021ம் நிதியாண்டின் டிசம்பர் மற்றும் மார்ச் காலாண்டில் வளர்ச்சி முறையே 14% மற்றும் 6.5% ஆக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பிஎம்ஐ 5.4 ஆக இருந்தது. அதோடு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த ஏப்ரல் மாதத்தில் 60 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் லாக்டவுன் தொடங்கிய நிலையில், தொழில் துறை உற்பத்தி விகிதம் 16.7% சரிந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் சப்ளை செயின் மெதுவாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், செயல்பாடுகள் முழுமையாக தொடங்கப்படவில்லை.

மேலும் குறைவான தேவை மற்றும் கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளில் செயல்படுவது கடினமாகியுள்ளது. இதனால் தொடர்ச்சியாக வீழ்ச்சியினைக் தான் காண இது வழிவகுக்கும் என்றும் கோல்டுமேன் சாச்ஸ் தெரிவித்துள்ளது.