இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1.6% ஆக குறையும் :  அமெரிக்க நிறுவனம் கணிப்பு

--

மும்பை

மெரிக்காவின் கோல்ட்மேன் சாஸ் என்னும் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  1.6% ஆகக் குறையும் என தெரிவித்துள்ளது.

உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த அரசு பிறப்பித்துள்ள தேசிய ஊரடங்கால் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.   இதனால் பலர் பணி இழந்து வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.   நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருளாதார ஆய்வு நிறுவனமான கோல்ட்மேன் சாஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், “இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் பொருளாதார வளர்ச்சி முடங்கி உள்ளது.    அரசு பல முயற்சிகள் எடுத்தும் பாதிப்புக்கள் குறையவில்லை.

கடந்த நிதியாண்டில் 10 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி வெறும் 5% ஆக இருந்தது.  தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் முழுவதுமாக முடங்கி உள்ளது.  இது பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதிக்கும்.

ஏற்கனவே மார்ச் 22 ஆம் தேதி அன்று  நாங்கள் இண்டியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 3.3% ஆக இருக்கும் எனக் கணித்திருந்தோம். தற்போது மேலும் பொருளாதார சரிவு நீடித்து வரும் சுழலில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி 1.6% வீழ்ச்சி அடையும்.

மொத்த ஜிடிபியில் 60% மக்களின் நுகர்வு பழக்கம் மற்றும் சேவைத் துறை பங்கு வகிக்கிறது.  இப்போது இது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த குறைவு ஏற்பட உள்ளது.  பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட அரசு இதுவரை ரூ.1.75 லட்சம் கோடி நிதி தொகுப்பு மற்றும் 0.75% வட்டிக் குறைப்பையும் அறிவித்துள்ளது.  இது போதுமானதாக இருக்காது.

இந்த கணிப்பில் இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் பாதியளவு மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளோம்.  ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது மட்டுமே பொருளாதார வளர்ச்சி குறித்த உண்மையான நிலையைக் கணிக்கமுடியும்” எனத் தெரிவித்துள்ளது.