கூச் பீஹர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வாழப்பாடி அருகே கோலாகல தொடக்கம்

வாழப்பாடி:  மாநில அளவிலான கூச் பீஹர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வாழப்பாடி அருகே சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தொடங்கியது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சர்வதேச தரத்தில் புதியதாக சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து25 கி.மீ துாரத்தில் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கிராமத்தில், மைக்ரோ பேருந்து நிறுத்தம் அருகே, சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியான சூழலில், 13 ஏக்கர் பரப்பளவில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது.

அந்த மைதானத்தில் முதன் முறையாக கூச் பீஹர் கோப்பைக்கான மாநில அளவிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் மாநில அணிகளுக்கு இடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கானமாநில அளவிலான 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

முதல் நாள் போட்டியில், தமிழ்நாடு அணி பேட் செய்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 51.3 ஓவரில் 87 ரன்களில் சுருண்டது.  உத்தரகண்ட் மாநில அணி 36 ஓவரில், ஒரு விக்கெட் இழந்து 93 ரன்களை குவித்தது.

போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கவழிகாட்டுதலில், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாக குழுவினர் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் மாநில அளவிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சேலம்மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ரசிகர்கள் திரளானோர் கண்டு ரசித்தனர்.