புதுடெல்லி: தனது வாழ்க்கைத் துயரத்திற்காக, நோயாளியான தனது தந்தையை பின்னால் அமரவைத்து, 1200 கி.மீ. தூரம் சைக்கிள் மிதித்தே சொந்த ஊருக்குச் சென்ற 15 வயது பீகார் சிறுமி ஒருவருக்கு தற்போது புதிய வாய்ப்பு ஒன்று கைக்கூடி வந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் பெயர் ஜோதி. அரசுகளால் கைவிடப்பட்ட நிலையில், உணவின்றி தவித்து, போக்குவரத்து ஏதுமற்ற சூழலில், வேறு ஏற்பாடுகள் இல்லாமல், தனது சைக்கிளிலேயே 1200 கி.மீ. பயணித்து இலக்கை அடைந்துள்ளார் இவர். 8ம் வகுப்பு படித்து வருகிறாராம் இச்சிறுமி!
இந்த நெடிய தூரத்தை இவர் வெறும் 7 நாட்களில் கடந்துள்ளார் என்பது ஒரு மாபெரும் வியப்பு! இந்தச் செய்தி, இந்திய சைக்கிள் பந்தயக் கூட்டமைப்பை எட்டியதும், இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டமைப்பின் சார்பில் கூறப்படுவதாவது; ஊரடங்கு நிலவரங்கள் தளர்ந்ததும், பீகார் மாநில சைக்கிள் பந்தய சங்கம், இச்சிறுமியை டெல்லிக்கு அழைத்துச் செல்லும். அங்கு சைக்கிள் பந்தயச் சோதனையில் இவர் பங்கேற்று, அதில் தேறிவிட்டால், இவருக்கு அடுத்தகட்ட முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படும்.
இவர் தொடர்பான மொத்த செலவையும் இந்திய சைக்கிள் பந்தயக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு மத்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வருவதாகும்.