விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரைவில் நல்ல செய்தி: ஸ்டாலின் கேள்விக்கு எடிப்பாடி பதில்

--

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்  டெல்டா பகுதியை தமிழக அரசு ‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்’ என அறிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி,  விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரைவில் நல்ல செய்தி வரும் என பதில் கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். புதிய திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தால் தான் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சிறப்பாக அமையும். எனவே சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு வேளாண் பெருமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதை ஏற்று, அண்மையில் தலைவாசல் கூட்ரோடு அருகில் புதிய கால்நடை பூங்கா துவக்க விழா நிகழ்ச்சியில், நான் பேசும் போது, டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன்.

இது சம்பந்தமாக, சட்ட நிபுணர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், ஒரு நல்ல செய்தி விரைவில் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட உடனே, இதற்குண்டான பணிகள் எல்லாம் துவங்கப்பட்டு விட்டது. சரியான முறையிலே சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசித்து தான் இதை கொண்டு வர முடியும். ஏன் என்றால் இதில் பல பிரச்சனைகள் இருக்கிறது.

நீங்கள் ஏற்கனவே பல செய்திகளை எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். அதை எல்லாம் விவரமாக சட்ட வல்லுநர் களுடன் விவாதிக்கப்பட்டு, நீங்கள் சொல்லியபடியே சட்டமன்றத்தின் மூலமாக இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட நாங்கள் முயற்சி எடுக்கின்றோம். நிச்சயமாக நீங்கள் நினைக்கின்றபடி அனைத்தும் செயல்படுத்தப்படும் என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி கூறினார்.

You may have missed