காங்கிரஸ் அரசின் நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்…..எடியூரப்பா

பெங்களூரு:
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்கள் அவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டு தொடரப்படும். அன்ன பாக்கியா என்ற திட்டம் அன்ன தசோகா என்ற பெயரில் செயல்படுத்தப்படும். அதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் மானிய விலையில் காலை உணவு, மதிய சாப்பாடு, இரவு உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்திரா பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வேறு நல்ல தலைவர்கள் பெயரில் செயல்படுத்தப்படும். தேர்தலில் பாஜக முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். வெளிப்படையான, ஊழலற்ற, வளர்ச்சி மிக்க ஆட்சியை கொடுப்போம். முதல்வர் சித்தராமையா 2 தொ குதிகளிலும் தோல்வி அடைவார்’’என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சி பிரிந்த அமைப்பாக உள்ளது. முதல்வராக சித்தராமையா, லோக்சபாவுக்கு மல்லிகார்ஜூன கார்கே, மாநில கட்சியில் தலைமைக்கு பரமேஸ்வரன் என இவர்கள் ஆளுக்கொரு திசையை நோக்கி பயணிக்கின்றனர். அவர்கள் யாரும் பிரச்சாரத்தில் ஒரே மேடையை கூட ஒன்றாக பகிர்ந்து கொள்ளவில்லை. ஜனார்த்தன் ரெட்டி பாஜக.வில் இல்லை. எனினும் அவர் தனது நண்பர்களுக்காக பிரச்சாரம் செய்வது ஜனநாயக உரிமை. மதசார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது என்பதில் உண்மையில்லை’’ என்றார்