லண்டன்:

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதன் எதிரொலியாக தற்போது அங்கு வழங்கப்படும் பழுப்பு நிற பாஸ்பேர்ட்டுக்கு பதில் பிரிட்டனின் பாரம்பரியமான அடர் நீல பாஸ்போர்ட்களை மீண்டும் விநியோகிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பிரிட்டன் பேரரசு தனது ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் வசித்தவர்களுக்காக அடர் நீல நிறத்தில் பொன் நிற எழுத்துகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டை கடந்த 1921-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்ததைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுக்குரிய பொதுவான பழுப்பு நிற பாஸ்போர்ட்டை கடந்த 1988-ம் ஆண்டு முதல் பிரிட்டன் விநியோகித்து வந்தது. ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரிட்டன் தீர்மானித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் இதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அதையடுத்து, ‘பிரெக்ஸிட்’ எனப்படும் அந்த வெளியேற்றத்துக்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் அடர் நீல நிற பாஸ்போர்ட்டை மீண்டும் விநியோகிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் பிராண்டன் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது, பிரிட்டனின் தனி அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் இதுவரை வெளியிடப்பட்டு வந்த பாஸ்போர்ட்களுக்குப் பதிலாக, இனி பிரிட்டனின் பாரம்பரிய அடர் நீல பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்படும். இதில் மோசடி செய்ய முடியாத அளவுக்கு மிக பாதுகாப்பானதாக வடிவமைக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் தேசியவாதக் குழுக்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளன.