நியூயார்க்: கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுதல் உள்ளிட்டவைகளுக்காக ஒரு தனி வலைதளத்தை கூகுளின் துணை நிறுவனமான வெரிலி உருவாக்கியுள்ளது.

இதுதொடர்பாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ”கொரோனா பாதித்துள்ளதா, இல்லையா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்? என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள தனி வெப்சைட்டை கூகுள் உருவாக்கி வருகிறது” என்று தெரிவித்திருந்தார். இதுபற்றிய பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு கூகுளின் துணை நிறுவனமான வெரிலி, கொரோனா வலைதளத்தை துவக்கியுள்ளது.

தற்போதைக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டும் இந்த வலைதளம் துவக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவோர், அமெரிக்க குடிமக்களாகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கூகுள் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

சுய விபரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு கூகுள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் அரசு துறைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும். பொது சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் கையெழுத்திட வேண்டும். கலிபோர்னியாவில் உள்ள பயோடெக்னாலஜி நிறுவனம், கலிபோர்னியா ஆளுநர் அலுவலகம், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வலைதளம் செயல்படும்.

பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்கள், அருகில் உள்ள நடமாடும் பரிசோதனை நிலையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுவர். ஒரு முறை பரிசோதனை செய்யப்பட்டால், அடுத்து வரும் சில நாட்களில் அவர்களுக்கு முடிவு தெரியப்படுத்தப்படும்.

இதுகுறித்து வெரிலி தரப்பில் கூறுகையில், “அதிக பாதிப்பு இருப்பதால் கலிபோர்னியாவில் இப்போதைக்கு வலைதளத்தை தொடங்குகிறோம்” என்றுள்ளது. இந்த வலைதளத்திற்கு ‘புராஜெக்ட் பேஸ்லைன்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வலைதளம்: www.projectbaseline.com/