பிரபஞ்சத்துடன் மனிதன் பேசிய முதல் பேச்சு – கூகுள் டூடுள் வெளியிட்டு கொண்டாட்டம்

பிரபஞ்சத்தை நோக்கி மனிதன் அனுப்பிய சமிஞ்ஞை ஆரசீபோ தகவல் என்றழைக்கப்படுகிறது. முதல் முதலில் ஆரசீபோ தகவலை நட்சத்திர கூட்டத்தை நோக்கி மனிதன் அனுப்பி 44 ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை நினைவு கூறும் வகையில் கூகுள் இன்று பிரத்யேக டூடுளை வெளியிட்டு கொண்டாடுகிறது.

google

நாம்வாழும் இந்த பிரபஞ்சம் மனிதனின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அண்டம் உருவானது பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் மனிதன் வரையறைகளை வகுத்தாலும் விடையறியா கேள்விகள் பல உள்ளன. அந்த வகையில் பிரபஞ்சத்துடன் வாழும் பிற கிரகங்களை சார்ந்த உயிரினங்களோடு மனிதன் தொடர்பு கொள்ள உருவாக்கப்ப்ட்ட பேச்சு போன்ற சமிஞ்ஞை தான் ஆரசீபோ தகவல்.

பிரபஞ்சத்தில் மற்றொரு நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு கிரகத்தில் இந்தத் தகவல் படிக்கப்பட்டு பதில் அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது. 1974ம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி அமெரிக்காவின் நியூகார்க் நகரில் உள்ள கர்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பிராங்க் டிரேக் (Frank Drake) மற்றும் கார்ல் சேகன் (Carl Sagan) ஆகியோரால் உருவாக்கப்பட்டு, தொலைநோக்கி மூலம் முதல் முதலில் விண்ணில் அனுப்பப்பட்டது.

1679 பிட் அளவுள்ள பைனரி தகவல் என்பதால் இதனை 73×23 என நிரை நிரல் (row, column) வடிவில் எழுதினால் ஒரு படத்தை உருவாக்கிவிடலாம். அந்தப் படம் கீழ்க்காணுமாறு இருக்கும். டிரேக்கும் சேகனும் உருவாக்கிய தகவலில் பல குறிப்புகள் உள்ளடக்கியவை.

arecibo

1. முதலில் 1 முதல் 10 வரையான எண்கள் பைனரி வடிவில் உள்ளன.
2. டி.என்.ஏ. (DNA) மூலக்கூறு உருவாக்கத்தில் முக்கியமான ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகிய ஐந்து அணுக்களின் அணு எண்கள் அடுத்து உள்ளன.
3. குளுகோசின் வேதியியல் வாய்ப்பாடு இருக்கிறது.
4. டி.என்.ஏ. வடிவத்தைக் காட்டும் படம் உள்ளது.
5. ஒரு மனிதனின் உருவமும் உள்ளது.
6. சூரியக் குடும்பத்தின் படமும் உள்ளது. (சூரியன் தொடங்கி வரிசையாக கோள்கள். பூமி மட்டும் தனித்துக் காட்டப்பட்டிருக்கிறது.)
7. ஆரஷீபோ சமிக்ஞையை அனுப்பிய தொலைநோக்கியின் படம்

மேற்கண்ட ஏழு குறிப்புகளும் ஆரசீபோ தகவல் படத்தில் தனித்தனி நிறங்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கின்றன. அது புரிதலுக்கானது மட்டுமே. உண்மையில் அந்த நிற வேறுபாடுகள் இருக்காது.

areci

இந்த ஆரசீபோ தகவல் சுமார் 25,000 ஒளி ஆண்டுகள் பயணித்து, சுமார் 3,00,000 லட்சம் நட்சத்திரங்கள் கொண்ட ஹெர்குலிஸ் (Hercules) அல்லது M13 என்ற நட்சத்திரக் கூட்டத்தை அடையக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், அனுப்பப்பட்டு 44 ஆண்டுகள் கடந்தும் வெறும் 259 ட்ரில்லியன் மைல் மட்டுமே பயணித்துள்ளது. இலக்கை நெருங்க இன்னும் சுமார் 146,965,638,531,210,240 மைல் பயணிக்க வேண்டுமாம்!

பிரபஞ்சத்துடன் மனிதனின் பேச்சு போன்றது இந்த ஆரசீபோ தகவல். மற்றொரு நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு கிரகத்தில் இந்தத் தகவல் படிக்கப்பட்டு பதில் அனுப்பப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அது நடக்க தேவைப்படும் காலம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இருந்தாலும் ஆரசீபோ தகவல் இந்த பிரபஞ்சத்தில் மனிதன் இருப்பைக் காட்டிக்கொள்ளும் ஒரு சின்னஞ்சிறு வெளிப்பாடு.

இந்நிலையில் ஆரசீபோ தகவல் அனுப்பப்பட்ட நாளை முன்னிட்டு கூகுள் இன்று பிரத்யேக டூடுள் வெளியிட்டு கொண்டாடுகிறது.

Leave a Reply

Your email address will not be published.