லாஸ்ஏஞ்சலிஸ்: அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து ‘தொழிலாளர் யூனியன்’ துவக்கியுள்ளனர்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த யூனியனுக்கு ‘ஆல்ஃபபெட் தொழிலாளர் யூனியன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு முறையான மற்றும் நியாயமான ஊதியம், முறைகேட்டிற்கு உள்ளாவோம் என்ற அச்சமற்ற பணிச் சூழல், பழிவாங்குதல் மற்றும் பாரபட்சமற்ற பணிச் சூழல் உள்ளிட்டவைகளுக்காக இந்த யூனியன் செயலாற்றும்.

கூகுள் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை எதிர்த்து கேள்வியெழுப்பிய பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தது தொடர்பாக, அமெரிக்க தொழிலாளர் ஒழுங்குமுறை அமைப்பின் கண்டனத்தைப் பெற்றிருந்தது கூகுள் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தான் அனைத்தையும் சட்டப்படியே செய்ததாய் நம்புவதாக கூறியிருந்தது கூகுள் நிறுவனம்.

“கூகுள் நிறுவனத்தில் பணியாளர்களுக்கான முறையான கட்டமைப்பை உருவாக்குவதற்காக நாங்கள் பல்லாண்டுகளாக செயலாற்றி வந்தோம். இந்த தொழிலாளர் யூனியனில் இதுவரை 226 பணியாளர்கள் இணைந்துள்ளனர்” என்று அந்த யூனியன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.