டில்லி

டிக் டாக் செயலிக்கு மாற்று எனக் கூறப்பட்ட மித்ரன் என்னும் இந்தியச் செயலியைக் கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது.

ரூர்கி ஐஐடி மாணவரான ஷிவாங்க் அகர்வால் என்பவர் மித்ரன் என்னும் ஒரு செயலியை உருவாக்கினார்.  இந்த செயலியில்  சிறு வீடியோக்கள் தரவேற்ற முடியும்.  மிதர்ன் என்பதற்கு நண்பன் எனப் பொருளாகும்,   பிரதமர் மக்களுக்கு உரையாற்றும் போது மித்ரோ என மக்களை அழைப்பதால்   இந்த செயலியின் பெயர் இந்தியர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்த செயலியை பலரும் தரவிறக்கம் செய்யத் தொடங்கினர். இந்த செயலி டிக் டாக் செயலிக்கு மாற்று என கூறப்பட்டது.  தற்போது சீனப் பொருட்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சீனாவின் டிக் டாக் செயலிக்குப் பதிலாக இந்தியாவில் மித்ரன் செயலி பயன்பாடு அதிகரித்தது.  ஒரே மாதத்துக்குள் இந்த செயலியின் பயனாளிகள் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது.

ஆனால் இந்த செயலி பல சர்ச்சைகளில் சிக்கியது.  இந்த செயலியை உருவாக்கிய ஷிவாங்க் அகர்வால் பெயரில் எவ்வித தொடர்பும் கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது.  அத்துடன் அவருடைய பெயரில் யாரும் எந்த ஒரு வலை தளத்திலும் தென்படவில்லை.   இந்நிலையில் இந்த செயலி முழுவதும் ஒரு பாகிஸ்தான்  மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து ரூ.2600க்கு வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதையொட்டி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலி தற்போது நீக்கப்பட்டுள்ளது.   கூகுளின் கொள்கைப்படி எந்த ஒரு செயலியும் பயனாளிகள் விவரங்களுக்கு  முழு பாதுகாப்பு அளிப்பதுடன் வேறெந்த செயலியில் இருந்து காப்பி செய்யப்பட்டதாக இருக்கக் கூடாது என்பதாகும்.  இதன் அடிப்படையில் இந்த செயலி நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த செயலியை கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்துள்ளதால் பயனாளிகள் தற்போது தரவிறக்கம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  அதே வேளையில் கூகுளின் கொள்கைப்படி இந்த சேவை அமைந்திருந்தால் இது குறித்து செயலியை உருவாக்கியவர் கூகுளிடம் மேல் முறையீடு செய்ய முடியும்.