அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள்: அமெரிக்க அலுவலகம் திறப்பை செப்டம்பருக்கு தள்ளி வைத்த கூகுள்

வாஷிங்டன்: கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் அமெரிக்க அலுவலகம் திறப்பதை செப்டம்பர் மாதம் வரை கூகுள் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது.

கூகுளின் அமெரிக்க அலுவலகங்கள் அனைத்தும் இப்போது குறைந்தது செப்டம்பர் 7 வரை மூடப்படும் என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கேத்ரின் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்து பணிபுரியும் உங்கள் அனைவருக்கும், உங்கள் மேலாளரிடம் இருந்த எந்த உத்தரவும் வரவில்லை என்றால் தயவுசெய்து தொடர்ந்து வீட்டிலேயே பணி செய்யுங்கள் என்று கூகிளின் உலகளாவிய பாதுகாப்பு துணைத் தலைவர் கிறிஸ் ராகோவ் மெமோவில் தெரிவித்தார்.

செப்டம்பர் 7 (தொழிலாளர் தினம்) திங்கள் வரை இந்த வழிகாட்டுதல் விரைவாக மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று ராகோ கூறினார். அமெரிக்காவில் அண்மையில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து இருக்கிறது.

கலிபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட 14 யு.எஸ். மாநிலங்களில் ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகள்  இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி அமெரிக்காவில் 47000 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.