மக்கள் பிரச்சினைக்கு போராடிய மாணவிக்கு குண்டாஸ்! மாணவர்கள் கொந்தளிப்பு

சேலம்,

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவியை தமிழக அரசு காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது.

இது மாணவ மாணவிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரி முன்பு  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாக கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சில நாட்களுக்கு முன்பு  சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி  முன்பாக நின்று கொண்டு, வளர்மதி (23), ஜெயந்தி (39),  ஆகியோர் கல்லூரிக்குள் செல்லும் மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

அந்த துண்டு பிரசுரங்களில் நெடுவாசல் கிராமத்தில் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திற்குள் அனுமதிக்ககூடாது என்றும், கதிராமங்கலத்தில் போராடிய கிராம மக்களை காவல்துறை கைது செய்ததை எதிர்த்து  புதுக்கோட்டையில் நடைபெறும் போராட்டத்தில் மாணவிகள் பங்கேற்க வேண்டும் என்றும் மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையறிந்த  போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வந்தனர். அதைத்தொடர்ந்து அவர் நக்ஸலைட் அமைப்புக்கு ஆள்சேர்ப்பதாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள  மாணவி வளர்மதி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மக்கள் பிரச்சினைக்காக போராடிய மாணவியை கைது செய்துள்ள காவல்துறையின் செயல் சேலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பல இடங்களில் மக்கள் பிரச்சினைக்காக போராடி வரும் மாணவ மாணவிகள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், தற்போது மாணவி ஒருவர்மீது குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைத்திருப்பது அதிகார மமதையின் உச்சக்கட்டம் என்று மாணவர்கள் கொந்தளித்துபோய் உள்ளனர்.

மக்கள் பிரச்சினைக்காக போராடிய காரணத்துக்காக ஏற்கனவே மே17 இயக்கத்தை சேர்ந்த வர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள நிலையில், தற்போது மாணவி ஒருவர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்திருப்பது தமிழக இளைஞர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.