பாலியல் மற்றும் இணையதள குற்றங்களுக்கும் குண்டாஸ்! சட்டதிருத்தம் நிறைவேற்றம்

சென்னை:

பாலியல் மற்றும் இணையதள குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் ஒரு வருடம் விசாரணை யின்றி அடைத்து வைக்கும் வகையில் குண்டாஸ் சட்த்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இதையடுத்து, குண்டாசில் கைது செய்யப்படும் நபர்கள் சட்டத்தின் ஓட்டையில் இருந்து  ஓராண்டு வெளியே வர முடியாது.

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, குண்டாஸ் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது அப்போது,  பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  குண்டாஸ் சட்டத்தின் கீழ் பாலியல் குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றவாளிகளை தமிழகத்தில் காவல்துறையினர் கைது செய்ய முடியும் என்று கூறியவர், ஒரு வருடம் வரை விசாரணை இல்லாமல் அவர்களை அடைத்து வைக்க முடியும் வகையில் சட்டம் திருத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், இதுகுறித்து கூறிய வழக்கறிஞர் ஒருவர், இதுவரை குண்டாஸ் சட்டம், போதைப் பொருள் கடத்துபவர்கள், வேட்டைக்காரர்கள், குண்டர்கள், பிம்ப்கள், மணல் கடத்தல்காரர்கள், குடிசைப்பகுதிகள் மற்றும் வீடியோ திருட்டு மோசடிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப் பட்டது. இந்த நிலையில், இனிமேல் சைபர் குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களை செய்யும் குற்றவாளிகளையும் குண்டாஸ் சட்டத்தின்கீழ் ஓராண்டு விசாரணையின்றி அடைந்து வைக்க முடியும்.

ஏற்கனவே பலர் மீது தமிழக காவல்துறை போட்ட குண்டாஸ் நடவடிக்கை, சென்னை உயர்நீதி மன்றத்தால், கடும் கண்டனத்துடன் விடு விக்கப்பட்டுள்ளது. குண்டாஸ் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி ஏராளமான குற்ற வாளிகள் தப்பித்துவிடுகின்றனர்.

ஆனால் புதிதாக திருத்தப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ் சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள்  தப்பிக்க முடியாது, கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டிருப்பதால், பாலியல் மற்றும் இணையதள குற்றங்கள் செய்தவர்களும் இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால், அவர்கள் ஒரு வருடம் சிறையிலிருந்து வெளியேற முடியாது, என்று தெரிவித்து உள்ளார்.