பாலக்காடு: கேரளாவில் வாழும் மொழிவழி சிறுபான்மையினரான தமிழர்களின் பிரச்சினைகளைக் களைவதற்கான நடுவட்டம் கோபாலகிருஷ்ணனின் ஒரு நபர் கமிஷன், தனது விசாரணையை பாலக்காட்டில் நடத்தியது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; கேரளாவின் பாலக்காடு, இடுக்கி, மூணாறு மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தமிழர்கள் லட்சக்கணக்கில் வசித்து வருகிறார்கள்.

ஆனாலும், இவர்கள் தங்களுக்கான நிலப் பட்டா, சாதி சான்றுகள் பெறுதல் உள்ளிட்டவற்றில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, இதுதொடர்பாக, தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர், கேரள முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கைகளை வைத்தனர்.

இதுகுறித்து பரிசீலித்த கேரள அரசு, தமிழர்களின் குறைகள் குறித்து ஆராய, நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் என்பவரைக் கொண்ட ஒருநபர் விசாரணைக் கமிஷனை அமைத்தது.

இந்நிலையில், ஒரு நபர் விசாரணை கமிஷன், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது விசாரணையை மேற்கொண்டது. “தமிழ்மொழி சிறுபான்மையினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். விரைவாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றார் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன்.