கோபி – நயன்தாரா – பா.ரஞ்சித்

ன்று “அறம்” திரைப்படம் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. கமர்சியல் வெற்றி என்பதோடு, “மக்கள் பிரச்சினைகளை ரசிக்கத்தக்க வகையில் சொல்லியிருக்கும் தரமான படம்” என்று அனைவரும் பாராட்டுகிறார்கள்.

ஆனால், “இப்படிப்பட்ட படத்தைக் கொடுக்க, அதன் இயக்குநர் கோபி நயினார் கடந்துவந்த பாதை துரோக முட்களால் ஆனது” என்கிறார்கள் கோலிவுட்டில்.

ஏற்கெனவே இது குறித்த தகவல்கள், இலைமறைகாயாக பேசப்பட்டதுதான் என்றாலும் நம்மிடம் விரிவாகப் பேசினார்கள், கோலிவுட் வி.ஐ.பி.க்கள் சிலர்.

அவர்கள் கூறியது இதுதான்:

“அறம் படத்துக்கு முன்பாகவே, பேசப்பட்டவர் கோபி நயினார். மீஞ்சூர் கோபி என்றும் நட்ராஜ் கோபி என்றும் அழைக்கப்படுபவர். திரைப்பட ஆசை என்பதைக் கடந்து திரைப்படங்கள் மூலம் சமுதாயத்துக்கு நல்ல செய்திகளை.. அவசியமான தகவல்களைச் சொல்ல வேண்டும் என்ற தீரா தாகம் உள்ளவர். நிறைய படிப்பவர். அதோடு, மக்கள் பிரச்சினைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடவும் தயங்காதவர்.

பாலு

இவர், வட சென்னையை மையமாக வைத்த ஒரு கதையை உருவாக்கினார். அதை வள்ளியூர் பாலு என்பவரிடம் கூறினார். இந்த வள்ளியூர் பாலு என்பவர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  சென்னையில் ஆங்கில மொழிப் பயிற்சி அளித்து வருவதோடு, மற்றும் நடன வகுப்புகளையும் நடத்தி வருபவர்.   திரைப்படத் துறையோடு நெருங்கிய உறவு கொண்டவர். இவரிடம் புதுமுக  இயக்குநர்கள்  கதை சொல்வது வழக்கம். அப்படித்தான் கோபியும் இவரிடம் கதை சொன்னார்.

வடசென்னையைச் சேர்ந்த சிறந்த கால்ப்பந்தாட்ட வீரன் ஒருவன் வசதி வாய்ப்பு இல்லாததால்  அங்கீகாரம் கிடைக்காமல் எப்படி துயரப்படுகிறான் என்பதுதான் கதை. இதற்கு குதிரை என்று வைத்தார் கோபி.

இந்தக் கதையை ஓகே செய்கிறார் வள்ளியூர் பாலு. கதை விவாதம் துவங்கியது.  படத்தின் தலைப்பு, “கருப்பர் நகரம்” என்று மாற்றப்பட்டது.

படத்தின் ஹீரோவாக அகில்,  ஹீரோயினாக அருந்ததி,   முக்கிய கதாபாத்திரத்தில் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் புக் செய்யப்பட்டன. இசை தேவா என்றும் முடிவானது.  பாடல்கள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த நவம்பர் 2010ம் ஆண்டு, சென்னை விஜிபி தங்க கடற்கரையில் முதல் நாள் படப்பிடிப்பு நடந்தது. பாடல் காட்சி எடுக்கப்பட்டது. பிறகு, பட்டினப்பாக்கம், மைலாப்பூர் லஸ் குடியிருப்பு ஆகிய இடங்களிலும் தொடர்ந்த படபிடிப்பு நடைபெற்றது.

கருப்பர் நகரம் படப்பிடிப்பில் நடிகர்களுடன் கோபி ( நடுவில் நிற்பவர்)

அடுத்த கட்ட படபிடிப்பு ஓட்டேரியில் நடைபெற்ற போது ஒரு தடை ஏற்பட்டது. பிரபல நாளிதழ் ஒன்று, இந்த படப்பிடிப்பு  குடியிருப்புப் பகுதியில் நடைறுவதால் மக்களுக்கு தொல்லை ஏற்படுகிறது என்று செய்தி வெளியிட… காவல்துறை படப்பிடிப்புக்கு தடை விதித்தது.

இதனால் படப்பிடிப்பு தாமதமாக, படத்தின் ஹீரோ அகில், வேறு படங்களில் நடிக்க போய்விட்டார். இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து, ஒருவழியாக மீண்டும் படப்பிடிப்புக்கு தாயாரான நேரம்,  ஹீரோ அகிலின் கால்ஷீட் கிடைக்கவில்லை. இதனால்,   படத்தின் தயாரிப்பாளர் பாலு, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனிடம் அகில் குறித்து புகார் செய்கிறார்.

இந்த நிலையில் இயக்குநர் ரஞ்சித் அட்டக்கத்தி படத்தைத் துவங்கி எடுத்தும் முடித்துவிட்டார். படமும் ரிலீஸ் ஆனது.

அந்த படத்தைப் பார்த்த கோபி அதிர்ச்சியானார். தனது கருப்பர் நகரம் (குதிரை) படத்தின் காட்சிகளில் இருந்து முக்கியமான ஐந்து காட்சிகள் அப்படியே அட்டக்கத்தி படத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். ஏற்கெனே தன்னுடன் கதை விவாதத்தில் ஈடுபட்ட பா.ரஞ்சித் இது போல செய்துவிட்டாரே என்று குமுறினார்.

இதை தயாரிப்பாளர் பாலுவிடம், கோபி தெரிவிக்க.. ரஞ்சித் காப்பியடித்த அந்த ஐந்து சீன்களை மாற்ரிவிட்டு படப்பிடிப்பைத் துவங்கலாம் என்றார் பாலு.

இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் அடுத்த படமான கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் படப்பிடிப்பு சென்னை வியாசர்பாடி பகுதியில் நடந்தது.

கருப்பர் நகரம் படத்தில் நடித்த சார்லஸ் என்பவர், இந்த மெட்ராஸ் படத்திலும் நடித்தார். அன்றைய படப்பிடிப்பில், கருப்பர் நகரம் படத்தின் காட்சியையே பா.ரஞ்சித் எடுக்க.. ஆத்திரமானார் சார்லஸ். உடனே பா.ரஞ்சித்திடம், “ஏன் இப்படி காப்பி அடித்தே படம் எடுக்கிறாய்” என்று வெளிப்படையாகவே சண்டை போட்டார்.

பா.ரஞ்சித்

இதையடுத்து மெட்ராஸ் படத்தின் இயக்குநர் ரஞ்சித், கருப்பு நகரம் படத்தின் இயக்குநர் கோபியை அழைத்து, தன்னுடையது வேறு கான்செப்ட் என்றும்,  இருவரும், தலித்  சமூகத்தைச் சேர்ந்த  நாம் சண்டையிடுவது, ஆதிக்க சாதியினருக்குத்தான் வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் உருக்கமாகப் பேசினார்.

இதையடுத்து கோபி, இந்த விவகாரத்தை விட்டுவிட்டார்.

இந்த நிலையில் மெட்ராஸ் படத்தின் ட்ரைலர் மற்றும், கார்த்தியின் பேட்டி, தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்பானது. இதைப் பார்த்த “கருப்பர் நகரம்” தயாரிப்பாளர் பாலு, அதிர்ச்சி அடைந்தார். தனது கருப்பர் நகரம் படத்தின் காட்சிகள் அப்டியே மெட்ராஸ் படத்தில் இருக்கிறதே என்பதுதான் அவரது அதிர்ச்சிக்குக் காரணம்.

உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.   (நாள் 19 ஜுலை 2014.)  தயாரிப்பாளர் கவுன்சிலின் செயலாள   மெட்ராஸ் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா! ஆகவே பாலுவின் புகார் அப்படியே இருக்க.. மெட்ராஸ் படத்தின் வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்பட்டது.

இதனால் பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த நிலையில் அவரை அழைத்துப் பேசினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு. உடன், பா.ரஞ்சித்தும் இருந்தார்.

தயாரிப்பாளர் பாலு, நான் “கருப்பர் நகரம் படத்தை இதுவரை எடுத்தவரை,  தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குழு பார்க்கட்டும். அதே குழு மெட்ராஸ் படத்தையம் பார்க்கட்டும். அவர்களே முடிவு சொல்லட்டும்” என்றார். இதற்கு பா.ரஞ்சித் ஒப்புக்கொள்ளவில்லை.

பதிலாக, கருப்பர் நகரம் படத்தின் தயாரிப்பாளர் பாலுவிடம், “ஏதோ நடந்துவிட்டது. பெரிது படுத்தாதீர்கள். பிறகு உங்களுக்கு ஒரு படம் இயக்கித்தருகிறேன்” என்றெல்லாம் கெஞ்சினார்.

தயாரிப்பாளர் பாலுவோ, தான் கருப்பர் நகரம் படத்துக்காக செலவு செய்த, இரண்டரை கோடி என்ன ஆவது என்று கேட்டார். எந்த முடிவும் எட்டப்படாமல் அந்த சந்திப்பு முடிந்தது.

தலித் மக்கள் குறித்து அக்கறையோடு பேசுகிறார் பா.ரஞ்சித். அதே நேரம், அவரால் பாதிக்கப்பட்ட இயக்குநர் கோபி, தயாரிப்பாலு ஆகியோரும் தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

ஞானவேல் ராஜா

இதற்கிடையே, குறிப்பிட்ட வழக்கு நீதிமன்றத்தில் மெட்ராஸ் பட வெளியீட்டுக்கு இரு தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

கருப்பர் நகரம் தயாரிப்பாளர் பாலு தரப்பில், “இது வரை, கருப்பர் நகரம் படத்துக்கு செலவு செய்துள்ள மூன்று கோடி ரூபாயை , நீதிமன்றத்தில் மெட்ராஸ் தயாரிப்பாளர் கட்ட வேண்டும்” என்று கூறப்பட்டது. இதற்கு மெட்ராஸ் பட தயாரிப்பாளர்   ஞானவேல் ராஜா தரப்பு மறுத்தது.

இறுதியாக, “மெட்ராஸ் படத்தை வெளியிடட்டும். அதே நேரம் அந்த படத்தின் வசூல் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே கோபியின் இன்னொரு கதையும் திருடப்பட்டதாக விவகாரம் எழுந்தது. .  விஜய் நடித்த ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கத்தி படம்தான் அது. அது குறித்து வழக்கு தொடர்ந்தார் கோபி. அந்த விசயத்தில் அவர் பிஸியாகிவிட்டார்.

ஏ.ஆர். முருகதாஸ்

அதுவும் ஒரு துரோகக் கதைதான்… நிஜக் கதை. இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ், சொந்தமாக படம் தயாரிக்கும் மூடில் இருந்தார். இதையடுத்து பலரிடம் கதை கேட்டார். அப்படி கதை சொன்னவர்களில் கோபியும் ஒருவர். அவர் கூறிய கதை, ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிடித்துப்போய்விட்டது.

இதையடுத்து படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்க, கோபி இயக்குவதாக தீர்மானிக்கப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகத்திலேயே பல நாட்கள் கதை விவாதம் நடந்தது.  ஆனால் திடீரென முருகதாஸ், தான் இப்போது படம் தயாரிக்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக தெரிவித்தார்.

பா.ஏகலைவன்

ஆனால் அடுத்த சில பல மாதங்களில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்க.. கத்தி படம் வெளியானது. அதைப் பார்த்த கோபி, அதிர்ந்தார். தான் கூறிய கதையையே முருகதாஸ், கத்தியாக எடுத்திருக்கிறார் என்று ஆதங்கப்பட்டார்.  இது குறித்து திரைவட்டார பிரமுகர்கள் பலரிடம் கோபி முறையிட்டும் பலனில்லை.

இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன்,  இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அடுத்து  மற்ற ஊடகங்களிலும் பெரும் விவாதமானது.

ஒரு கட்டத்தில் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்தார் கோபி.  ஏதோ உத்திரவாதங்கள் தரப்பட, கத்தி படம் குறித்த தான் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினார்  என்று ஒரு செய்தி பரவியது.. ஆனால், இந்த வழக்கு தற்போதும்  எழும்பூர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்கிறது கோபி தரப்பு.

அறம் பத்திரிகையாளர் சந்திப்பு

இந்த வழக்கில்  மூத்த பத்திரிகையாளர் பா. ஏகலைவன் மற்றும் தேவேந்திரன் சாட்சிகள்.

இப்படி தொடர்ந்து துரோகங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் ஆளான கோபிக்கு அறம், வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது.

இதை “அறம்” படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போதே கோடிகாட்டினார் கோபி.

“அறம் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷை இயக்குனர் சற்குணம்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின் நயன்தாராவுக்கு கதை சொல்ல வைத்தார்கள், சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது” என்றவர், “கதை ஓகே ஆனபிறகு கூட இந்தப்படத்தை தடுத்தே ஆக வேண்டும் என்று பலர்  முயற்சி செய்தார்கள். ஆனாலும், நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து படத்தை முடிக்க துணை நின்றார்” என்று நெகிழந்து போய் கூறினார்.

எப்படியோ… நீண்ட நெருப்பாற்றில் மூழ்கி.. இப்போது கரை சேர்ந்துவிட்டார் இயக்குநர் (கோபி) நயினார்.

அறம் போல் இன்னும் பல தரமான படங்களை வழங்க அவரை வாழ்த்துவோம்!

–    சினிமுத்து