லக்னோ,

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கோரக்பூர் அரசு மருத்துவமனை குழந்தை இறப்பு  இன்னும் தொடர்ந்து வருகிறது.

கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 42 குழந்தைகள் பரிதாபமாக பலியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த குழந்தைகள் இறப்பு  மூளை வீக்கம் என்ற நோய் காரணமாக இறந்ததாக உ.பி. அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்  விசாரணைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த  மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவரது மனைவியும், மருத்துவருமான பூர்ணிமா சுக்லா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களில் அதே மருத்துவமனையில் மேலும் 42 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.கே. சிங் கூறுகையில், ‘கடந்த இரண்டு நாள்களில் 42 குழந்தைகள் உயிரிழந்தன. இவற்றில் ஏழு குழந்தைகள் மூளை வீக்கம் காரண மாகவும், மற்ற குழந்தைகள் பிற காரணங்களாலும் உயிரிழந்துள்ளன’ என்று கூறினார்.

இந்த சோக சம்பவம் நாடு முழுவதும் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.