தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

டெல்லி: சிங்கள படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி இருக்கிறார்.

அரசு முறை பயணமாக இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜ பக்சே இந்தியா வந்திருக்கிறார். டெல்லியில், அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.

இருநாடுகளின் வர்த்தகம், பாதுகாப்பு, மேம்பாடு, மீனவர்கள் நலன் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியதாவது: இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பயன் அளிக்கும் வகையில் அமைந்தது.

பாதுகாப்பு மேம்பாடு, பொருளாதார ஒத்துழைப்பு என பல முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதித்தோம் என்றார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளி இடையே வலிமையான பிணைப்பு உள்ளது. இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு தரும்.

அந்நாட்டின் பல திட்டங்களுக்கு, 400 மில்லியன் டாலரும், தீவிரவாத ஒழிப்புக்கு 50 மில்லியன் டாலரும் நிதி உதவி வழங்கப்படும் என்றார்.

கார்ட்டூன் கேலரி