கொழும்பு

ந்திய அரசு இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியதற்கு இலங்கை அதிபர் கொத்தபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.  அங்கு இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும்.  மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் இது அதிகமாகும்.

இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது.  அவ்வகையில் ஒரு தனி விமானம் மூலம் மருந்துப் பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்தது.  இதற்காக இந்தியப் பிரதமர் மோடிக்கு  இலங்கை அதிபர் கொத்தபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டரில், “தனி விமானம் மூலம் இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியதற்காக இந்தியப் பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் கருணை மற்றும் தாராள உதவியைச் சரியான நேரத்தில் அளித்தது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது” எனப் பதிந்துள்ளார்.