கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜ பக்சேவுக்கு சிங்களர் பகுதிகளிலும், சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர் பகுதிகளிலும் அதிக வாக்குகள் விழுந்திருக்கின்றன.


உலக நாடுகள் எதிர்பார்த்த இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. பெரும் பரபரப்புக்கு இடையே, பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருக்கிறார்.
ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வியை ஒப்புக் கொண்டு இருக்கிறார். வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார்.


தேர்தல் முடிவுகளையும், விழுந்த வாக்குகளின் அடிப்படையிலும் பார்க்கும் போது, கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்களர்கள் பகுதிகளிலும், சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் பகுதிகளிலும் அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது.
குறிப்பாக காலே பகுதியில், கோத்தபய ராஜபக்சேவுக்கு 64.26% வாக்குகள் (4,66,148) கிடைத்திருக்கின்றன. அதே பகுதியில் சஜித்துக்கு 29.97 சதவீத வாக்குகளே பதிவாகி இருக்கின்றன.


குருநீகலே பகுதியில் முறையே 57.90%, 50.83% வாக்குகளை கோத்தபய ராஜபக்சே பெற்றிருக்கிறார். மாத்தளையில் 67.25 சதவீதமும், ஹம்பந்தோட்டா பகுதியில் 66.01 சதவீத வாக்குகளும் அவருக்கு கிடைத்திருக்கிறது.


இதேபோல, தமிழர் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவுக்கு அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அவர் பெற்ற வாக்கு சதவீதம் 83.86. வன்னியில் 82.12 சதவீதமும், மட்டக்களப்பில் 78.70 சதவீதமும் வாக்குகள் விழுந்திருக்கின்றன.


திரிகோணமலையில் சஜித் பிரேமதாசாவுக்கு 72.10 சதவீதமும், திகமாதுல்லா பகுதியில் 63.09 சதவீதமும் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. நுவரெலியாவில் 58.28 சதவீதம வாக்குகளை பெற்றிருக்கிறார்.