டெல்லி:

இந்தியாவில் தலைமை திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சியின் கீழ் 2 மில்லியன் இளைஞர்கள் பயனடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தரமற்ற பயிற்சி மையங்கள், மோசடியான மாணவர் சேர்க்கை நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய புலன் விசாரணை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி விபரம்:

பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தேசிய திறன் மேம்பாட்டு ஆணையம் (என்எஸ்டிசி) சார்பில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 34 மையங்களில் முதல் கட்டமாக 40 சதவீதம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவித்த 20 முன்னணி மையங்களில், 2 மையங்களில் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பயிற்சி அளிப்பதற்கு போதுமான இட வசதியும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த இரு மையங்களிலும் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வசதிகள் இங்கு இல்லை.


கிழக்கு டெல்லி பிரீத் விஹார் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சாப்ட்டாட் இன்ஸ்டிடியூட்டில் 5 சிறிய அறைகள் மட்டுமே உள்ளது. குறைந்த அளவிலான பர்னிச்சர்கள் மட்டுமே உள்ளது. இந்த மையத்தில் ஒரு ஆண்டில் 30 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் நகரில் உள்ள சிறிய மையங்களுக்கு சப் கான்ட்ராக்ட் முறையில் பயிற்சி அளித்து திட்ட இலக்கை எட்டியுள்ளது. இந்த சிறிய மையங்களை கண்காணிக்கும் பணியை சாப்ட்டாட் செய்துள்ளது.

மேலும் ஒரு ஆண்டில் 5 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது ஆதார் எண் விபரங்களை கூட பரிசீலனை செய்யப்படவில்லை. இதன் மூலம் ஒரே நபரின் பெயர்கள் பல முறை பதிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. ‘‘இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்களில் பல குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. அதனால் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று திறன் மேம்பாட்டு குழு முன்னாள் உறுப்பினர் ராஜ் பால் அரோரா தெரிவித்துள்ளார்.

பயிற்சி மையங்களின் அவல நிலை குறித்து அரசின் கவனத்துக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக முதல் கட்டத்தில் இருந்த 12 ஆயிரத்து 181 மையங்கள் என்ற எண்ணிக்கை இரண்டாம் கட்டத்தில் ஆயிரத்து 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பயிற்றுனர் பற்றாகுறை, உள்கட்டமைப்பு வசதி இல்லாமை போன்ற காரணங்களால் முதல் கட்ட பயிற்சி அரையும்குறையுமாக நடந்து முடிந்துள்ளது. இல்லை என்றால் ஏன் பயற்சி மையங்களின் எண்ணிககையை குறைக்க வேண்டும்’’ என்று திறன் ஆலோசகரான ஓய்வுபெற்ற கர்ணல் சக்சேனா தெரிவித்துள்ளார்.

ஆனால் தரம் குறைவான பயிற்சி என்ற குற்றச்சாட்டை என்எஸ்டிசி மறுத்துவிட்டது. இது குறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெயந்த் கிருஷ்ணா கூறுகையில், ‘‘இரண்டாம் கட்ட பயிச்சிக்கான மையங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பயிற்சி தேவையான வசதிகள் ஆயிரத்து 400 மையங்களில் இருப்புது மட்டும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சி தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 2.4 மில்லியன் இளைஞர்களு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்ட பயிற்சியில் பயிற்சி பெற்றவர்களில் 5 சதவீதம் பேர் குறைந்த திறன் கொண்ட பணிகளில் சேர்ந்துள்ளனர். இந்த பிரச்னைகள் காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக 2 திட்டங்களை அறிவித்து ரூ. 6 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. ஏற்கனவே ஒதுக்கிய ஆயிரத்து 500 கோடி ரூபாயில், ஆயிரம் கோடி ரூபாயை கடந்த டிசம்பர் மாதம் தான் என்எஸ்டிசி செலவழித்துள்ளது.

மொத்தம் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 513 பேரில் 5ல் ஒரு பங்கு பேர் 10 முன்னணி நிறுவனங்களிலும், மேலும், 4 பங்கு பேர் டெல்லி மண்டலத்தில் பயிற்சி பெற்றதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5வது பெரிய மையமான சாப்ட்டாட் நிறுவனம் எவ்வாறு ஒரு ஆண்டில் 30 ஆயிரம் பேருக்கு பயற்சி அளிக்கப்பட்ட விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்த நிறுவனத்துக்கு டெல்லியில் 5 பயிற்சி மையங்கள் உள்ளது. இதேபோல் மற்றொரு டெல்லி சார்ந் பயற்சி நிறுவனமாக போஸிட் திறன் அமைப்பு 12 ஆயிரத்து 955 பேருக்கு பயிற்சி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விமான கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறது. ஆனால் பிரதமர் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் ஒருவருக்கு கூட பயிற்சி அளிக்கப்படவில்லை என்று அந்த நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.மேலும், இந்நிறுவனத்துக்கு சாரான்பூர் ரோடு, லோலி ஜெய்த்பூர் ரோடு, பதர்பூர் மற்றும் ஜமீனா நகரில் 3 மையங்கள் இருப்பதாக ஊழியர் தெரிவித்தார். அங்கு சென்று பார்த்தபோது சிறிய அளிவிலான அறைகள் மட்டுமே இருந்தது.

முகமை நியமனம் மூலம் 50 மையங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்ததாக அங்கு பணியாற்றும் மற்றொரு ஊழியர் தெரிவித்தார். பயிற்சி மையங்களுக்கு மானியம் மற்றும் கடன் உதவிகளை அரசு செய்து கொடுக்கிறது.
முதல் கட்ட பயிற்சிக்கு சில ஏற்பாடுகளை செய்துகொள்ள பயிற்சி மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஏற்பாட்டில் முறைகேடு நடந்துள்ளது. அதனால் இந்த விபரங்களை திறன் மேம்பாட்டு நிர்வாக திட்டத்தில் பதிவேற்றம் செய்யவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் என்எஸ்டிசி கூறுகையில்,‘‘இந்த ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் கைவசம் இல்லை. முகமைகள் மூலம் அளிக்கப்பட்ட பயிற்சி விபரங்கள் அந்தந்த பயிற்சி மையம் வசம் மட்டுமே இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளது. ஆனால், பயிற்சி அளித்த முகமைகளின் விபரங்களை வெளியிட மறுக்கப்பட்டது.

கிருஷ்ணா கூறுகையில், ‘‘என்எஸ்டிசி வசம் அனைத்து தகவல்களும் இருக்கிறது. பயிற்சி மையங்கள், முகமை பயிற்சியாளர்கள் குறித்த விபரங்கள் இருக்கிறது’’ என்றார். ஆனால் அதை வெளியிட மறுத்துவிட்டார்.‘‘ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ஒருங்கிணைந்த யுசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எஸ்டிஎம்எஸ் இணையதளத்தில் மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய முடியும். இந்த யுசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை முகமை பயிற்சி மையங்களும் பயன்படுத்தியுள்ளன. அவர்கள் ஒரே விபரங்களை திரும்ப திரும்ப பதிவேற்றம் செய்துள்ளனர்’’ என்று சக்சேனா தெரிவித்தார்.

இந்த பயிற்சி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக ரூ. 8 ஆயிரம் மானியமாக வரவு வைக்கப்ட்டுள்ளது. இதற்கு ஏற்ப மாணவர்களின் ஆதார் விபரங்கள் இல்லை. என்எஸ்டிசி சர்வர்களில் ஆதார் எண்ணையும், வங்கி கணக்கையும் பயிற்சியாளர்கள் இணைத்திருக்க வேண்டும்.

1.4 மில்லியன் பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 71 880 பேரது ஆதார் எண்கள் பொருந்தாத நிலை உள்ளது. மானியம் பெற ஆதார் எண் கட்டாயம் என்பது அனைத்து பயிற்சி மையங்களுக்கும் கண்டிப்பாக தெரியும். 5.71 லட்சம் பேரின் ஆதார் எண் இல்லாதததால், மாணவர் சேர்க்கையில் குளறுபடியும், மோசடியும், முறைகேடும் நடந்திருப்பது உறுதியாகிறது.

மொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. அரசு மானியத்தை அனுபவிக்க பயிற்சி மையங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளன. தற்போது இரண்டாம் கட்ட பயிற்சிக்கு மாணவர் சேர்க்கையின் போது போலிகளை தவிர்க்க ஆதார் எண்களும் சேகரிக்கப்படுகிறது.