சென்னை:

மிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். கவர்னர் கால தாமதம் செய்து வருவது ஜனநாயக படுகொலை சென்று திருமாளவளன் கூறி உள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற நிலையான ஆட்சியை அமைப்பதற்கு தமிழக பொறுப்பு கவர்னர் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை சில நாட்களில் தொடங்க உள்ளது. அதில் தமிழகத்தின் நியாயத்தை முன்வைத்து வாதாட வேண்டும். ‘நீட்’ நுழைவுத் தேர்வு தொடர்பாகத் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்.

வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருக்கிறது. விவசாயி களுக்கான வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இந்தக் கடமைகளை எல்லாம் செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான ஒரு அரசாங்கம் தமிழ்நாட்டில் இல்லை என்றால் மாபெரும் இழப்பைத் தமிழகம் சந்திக்க நேரிடும். இது கவர்னருக்கு தெரியாதது அல்ல.

எனவே அவர் தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நிலையான ஆட்சி அமைவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு மாறாக, தாமதம் செய்வது தேவையற்ற குதிரை பேரங்களுக்கு இடமளிப்பதாக அமைந்துவிடும். அப்படியான பேரங்களுக்கு ஊக்கம் அளிப்பதும், அரசியல் குழப்ப நிலையை ஏற்படுத்துவதும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பாகிவிடும் என்பதையும் கவர்னரின் மேலான கவனத்துக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.