நோட்டு செல்லாது என்று எங்களுக்கு 7ந்தேதிதான் மத்திய அரசு தெரிவித்தது! ரிசர்வ் வங்கி

டில்லி,

நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்போவதாக நவம்பர் 7ந்தேதிதான் எங்களுக்கு தெரிவிக்கப்ப பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

உயர்மதிப்புடைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.  நவம்பர் 8ந்தேதி இரவு பிரதமர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் தடைபட்டது. பொதுமக்கள் பணத்திற்காக வங்கிகளின் வாசல்களில் தவமாய் தவமிருந்து வருகின்றனர்.

நோட்டு தடையாலும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்தும் பாராளு மன்ற நிலைக்குழு – நிதி, மத்திய ரிசர்வ் வங்கிக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு ரிசர்வ் வங்கி எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ள விளக்கத்தில், புதிய ரூபாய் நோட்டு அறிமுகம் செய்வதால்,  கருப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதிகளிடம் உள்ள கள்ள நோட்டுக்களை அழிக்கவும் கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட இருப்பதாக கூறியது.

மேலும் ரூபாய் தடை குறித்து, நவம்பர் 7ந்தேதிதான் எங்களுக்கு அரசு தெரிவித்ததாகவும், அடுத்த நாளான  8ந்தேதி நாங்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தோம் என்றும் கூறியுள்ளது.

மேலும் பயன்பாட்டில் உள்ள 86% தொகையை உடனடியாக நிறுத்துதால் நாடு முழுவதும்  பணம் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ளது.

மேலும் தற்போது எங்களிடம் போதுமான பணம் இல்லை என்ற தகவலையும் கூறி உள்ளது.

ஆர்பிஐ கவர்னர் உஜித் பட்டேலுக்கு மற்றொரு பாராளுமன்ற குழு ரூபாய் விவகாரம் குறித்து வரும் 20ந்தேதி நேரில் விளக்கம் அளிக்க அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.