கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகினை பராமரிக்க தமிழக அரசு 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நம் நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இரண்டையும் தெளிவாக பார்க்கலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும், கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியன சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன. குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இவற்றை நேரில் பார்த்து ரசிக்கும் வகையில், தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் எம்.எல்.குகன், எம்.எல்.விவேகானந்தா, எம்.எல்.பொதிகை ஆகிய மூன்று படகுகள் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இயக்கப்பட்டு வருகின்றன.

கோடை விடுமுறை, ஐயப்ப சீசன் உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்கள் முடிந்துள்ள நிலையில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக  நிர்வாகம் படகினை பராமரிக்க முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக விவேகானந்தா படகினை பராமரிக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பபட்டது. இந்த பராமரிப்பு பணிகளுக்காக, தமிழக அரசு 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து விவேகானந்தா படகை சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக  நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் மட்டும், 20.49 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சீசன் காலங்களில், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை பார்வையிடவே, சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவர்.

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகுகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது இயக்கப்படும் 3 படகில் ஒன்றான விவேகானந்தா படகு, ரூ.23 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு மாதங்களில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பெற்று, மெரைன் அதிகாரிகள் சோதனைக்கு பின்பு ஆகஸ்ட் 15க்குள் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தினமும் 15 முதல் 20 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, திட்டமிட்ட  காலத்துக்குள் படகு பராமரிப்பு பணிகள் முடிக்கப்படும். அதைத் தொடர்ந்து, மற்ற படகுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படும்.