பாராளுமன்றத்தை முடக்கி வையுங்கள்! இங்கிலாந்து ராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை

பிரிட்டனின்  பிரதராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக போரிஸ் ஜான்சன் கடந்த 24ந்தேதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில், பாராளு மன்றத்தை சஸ்பெண்ட் செய்யுமாறு இங்கிலாந்து ராணிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

‘ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வந்த நிலையில், அப்போதைய பிரதமர் தெரசா மே கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக  அறிவித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில்,  பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை  சந்தித்த  போரிஸ் ஜான்சன்,  பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்தும்,  ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து இங்கிலாந்து வெளி யேறுவது குறித்து விவாதித்ததாகவும்,  பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக  மறு பேச்சுவார்த்தை குறித்த ஜான்சனின் கோரிக்கையை மக்ரோன் நிராகரித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  எந்த ஒரு சூழ்நிலையானாலும் வருகிற அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக  ஐரோப்பிய யூனியனிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜான்சன் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மேல் ஆன போதிலும் இதுவரையில் சுமூகத் தீர்வு எட்டப்படாத நிலையில்,  அடுத்த மாதம் ஐநா பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதால் ப்ரெக்ஸிட் குறித்து ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டஸ்க் உடன் போரிஸ் ஜான்சன் பேசுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்கி வைக்குமாறு ராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் பிரதமர் போரிசின் ஜான்சனின் முடிவு கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. பாராளுமன்றத்தை மூடுவதற்கான யோசனை,  பிரெக்சிட் செயல்பாட்டில் எம்.பி.க்கள் தங்கள் ஜனநாயக பங்கை நிறுத்துவதை தடுக்கும் என்று கூறியுள்ளனர்.