2021 ஜூன் முதல் BIS சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு – விற்பனைக்கு தடை..!

டெல்லி: 2021 ஜூன் முதல் BIS சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு மற்றும்   விற்பனைக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இந்திய தர நிர்ணய பணியகத்திலிருந்து (Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்ட  ஹெல்மெட் மட்டுமே நாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும் என்று மத்திய அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.  நடப்பாண்டு செப்டம்பர் வரையில் இருசக்கர வாகன விபத்து காரணமாக 740பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்திலும், இருசக்கர வாகன விபத்து நடைபெற்றுள்ளது வேதனையடைய செய்துள்ளது. பலர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு காரணமாக தரமற்ற ஹெல்மெட் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் , 2016ம் ஆண்டு  ஹெல்மெட் குறித்து ஆய்வு செய்யவும், குறைந்த எடையிலும், பாதுகாப்பு மிகுதியாகவும் இருக்கும் வகையில் ஹெல்மெட் தயாரிப்பது குறித்து கமிட்டி அமைக்க உத்தரவிட்டது. அதையடுத்து எய்ம்ஸ் வல்லுநர்கள் மற்றும் BIS இன் நிபுணர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டனர்., கமிட்டியும் தனது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது. அதை மத்திய அரசும் ஏற்பட்டுக்கொண்டது.

இதையடுதது,  குழுவின் பரிந்துரைகளின்படி, BIS சிறப்பு விவரங்களை மத்தியஅரசு திருத்தியுள்ளது. அதையடுத்து,  இரு சக்கர மோட்டார் வாகனங்களை (தரக் கட்டுப்பாடு) ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் குறித்த ஆணையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி  2021 ஜூன் முதல் BIS சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மத்தியஅரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கூறிய, இரு சக்கர வாகனம் ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜீவ் கபூர் , இந்தியாவில் தினமும் விற்கப்படும் சுமார் 2 லட்சம் ஹெல்மெட்களில் 40% தரமானது கிடையாது.  மேலும்   “பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரு சக்கர வாகன ஓட்டிகள் வெறுமனே பிளாஸ்டிக் தொப்பிகளை அணிவார்கள், அவை  பாதுகாப்பற்றவை. வாகன ஓட்டிகள்  போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும, அரசு போக்குவரத்து விதிகளை  கடுமையாக அமல்படுத்தினால்,  நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்று கூறினார்.