ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் ஷஹாபாத் பகுதியில் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த 7 மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.

குழந்தையின் பாட்டி கோசாபாய் கூறுகையில், ‘‘7 மாதக் குழந்தை சன்னி தியோல் சஹாரியாவுக்கு இருமல், சளி கடந்த 23ம் தேதி முதல் இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கோசாபாய், அவரது கணவர், குழந்தையின் அம்மா சுமந்தாபாய் ஆகியோருடன் 6 கிமீ நடந்தே நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை தூக்கிக் கொண்டு சொந்த கிராமான சோர்க்காடியிலிருந்து அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

ஆனால் அங்கு மருத்துவர் இல்லை. பணி நேரம் முடிந்து வீட்டுக்குச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவரின் இல்லத்துக்குச் சென்றனர். ஆனால் அவரோ 5 மணி வரை காத்திருங்கள் இல்லையெனில் பாரனில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அந்த மருத்துவமனை இந்த இடத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ளது.

மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்குமா என்று முயற்சி செய்துள்ளனர். அதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து 80 கி.மீ தூரத்தில் உள்ள பாரன் மருத்துவமனைகுச் செல்ல பண ஏற்பாடு செய்ய மீண்டும் கிராமத்திற்கு வந்தனர்.

ஆனால் மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் குழந்தை அவர்கள் கைகளிலேயே இறந்து போனது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியத. இதனையடுத்து பாரன் தலைமை மருத்துவ அதிகாரி ராஜேந்திர மீனா என்ற உதவி மருத்துவ அதிகாரியை சம்பவ இடத்துக்கு அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.