அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ‘சம்பளம் கட்’: தமிழகஅரசு எச்சரிக்கை

சென்னை:

ரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டால் ‘சம்பளம் பிடித்தம்’ செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் மீண்டும் தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை  நாளை முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில்,  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஊதியம் பிடிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து துறையினருக்கும் தமிழக தலைமை செயலாளர்  எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தில்,  அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி உள்பட 150 சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

நாளை (ஜனவரி 22) தமிழகம் முழுவதும் வட்டம் அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் மறியல் போராட்டமும், 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதையடுத்து,  வரும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டால் அவர்களது ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் நாளை காலை 10.15 மணிக்குள் ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு தவிற, இதர விடுப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.