மயிலாடுதுறை: பழைய பொருட்கள் வாங்கப்படும், காயலான் கடையில் அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு போடப்பட்ட சம்பவம் பெரும பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் புதியதாக  நேற்று தொடங்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக மாவட்ட பள்ளிக்கல்வி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகஅரசு சார்பில், அரசு மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், கொரோனா தொற்று காரணமாக கல்விநிறுவனங்கள் இதுவரை திறக்கப்படாத நிலையில், மாணாக்கர்களுக்கு புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், பல பள்ளிகளில், மாணவர்கள் ஏராளமானோர் புத்தகங்களை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் ஒவ்வொரு பள்ளிகளிலும், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும்  ஏராளமான பாடப்புத்தங்கள் தேங்கி உள்ளன.

இதுபோன்று மயிலாடுதுறையில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் ஏராளமான புத்தகங்கள் தேங்கி உள்ளன. இதை விற்று காசாக்க  அங்கு பணி செய்து வந்த, கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன்  முடிவு செய்து, மயிலாடுதுறை, முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்குச் சொந்தமாக இரும்புக் கடையில் விற்பனை செய்துள்ளார்.

காயலான் கடையில் அரசின் புத்தகங்கள் புத்தம் புதியதாக குவிந்து கிடந்ததை கண்ட பொதுமக்கள், இதுகுறித்து கல்விஅலுவலகத்துக்கு புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து,  அங்கு வந்த கோட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது. அப்போது, விற்பனைக்கு போடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும், தற்போதைய  2019- 2020ஆம் கல்வியாண்டுக்குரியது என்பதும்,  அவை 6 முதல் 12-ம் வகுப்புக்கான புத்தகங்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.  பண்டல் பண்டலாக போடப்பட்ட புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 5 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்துப் புத்தகங்களைப் பறிமுதல் செய்த கோட்டாட்சியர், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இரும்புக் கடை உரிமையாளர் பெருமாள் சாமியிடம் விசாரணை நடத்தினர். அதில் மாவட்டக் பள்ளிக்கல்வி ஊழியர் மேகநாதன் என்பவர் புத்தகங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை  போலீஸார் கைது செய்துள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரியே, பாடப்புத்தகங்களை  விற்பனை செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.