அகமதாபாத்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு குஜராத் எம்.எல்.ஏ.ஜிக்னேஷ் மேவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி சம்பவத்துக்கு நாடு முழுவதும் அனைத்து கட்சி தலைவர்களும்  கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜகவுக்கு எதிராக களமிறங்கி குஜராத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜித்தேஷ் மேவானியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தூத்துக்குடியில் என்னத்தான் நடக்கிறது? தூய்மையான காற்றுக்காகவும், வாழ்வதற்கு நல்ல சுற்றுச்சூழல் வேண்டுமெனவும் போராடிய மக்களை போலீஸ் கொல்வதா? அரசாங்கம் வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுடன் காசுக்காக கூட்டுச் சேர்ந்துள்ளது. மிகவும் கேவலமானது’  என்று கூறியுள்ளார்.