டில்லி:

1,000 ரூபாய் நோட்டை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, புதிய, 500 – 2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, புழக்கத்தில் உள்ளன.

இதையடுத்து, புதிதாக 50,- 200 ரூபாய் நோட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
இதற்கிடையே, விரைவில் புதிய, 1,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் பரவியது. இதற்கு தற்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், சுபாஷ் சந்திர கார்க் வெளியிட்ட அறிவிப்பில், 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம், 1,000 ரூபாய் நோட்டு, இனி புழக்கத்தில் வராது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.