சோதனை செய்யாமலே நெகடிவ் சான்றிதழ் அளிக்க உத்தரவிட்ட டீன் பணியிட மாற்றம்

--

தூத்துக்குடி:

கொரோனா சோதனை செய்யாமலே பயிற்சி மாணவர்களுக்கு நெகடிவ் என சான்றிதழ் அளிக்க உத்தரவிட்ட அரசு மருத்துவமனை டீன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடிஎஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக டாக்டர் திருவாசகமணி பணி யாற்றி வந்தார்.  இங்கு கொரோனா நோயாளிகளுக்கு பயிற்சி மருத்துவர்களும் சேவையாற்றி வந்தனர். தற்போது அவர்களின் பயிற்சிக் காலம் முடிவடைந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பயிற்சி மருத்துவர்களை அங்கிருந்து வெளியேற்றி மருத்துவக் கல்லூரி விடுதிக்கு மாற்றவும் டீன் திருவாசகமணி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில்  மார்ச் 31-ம் தேதி யுடன் பயிற்சி முடிந்ததையடுத்து அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பும் முன்  கொரோனோ  பரிசோதனை செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும் என டீனிடம் வலியுறுத்தினர்.

ஆனால், போதுமான பரிசோதனை கிட் இல்லாததால், அவர்களுக்கு பரிசோதனை செய்யாமலே நெகட்டிவ் என சான்றிதழ் கொடுக்குமாறு டீன் திருவாசகமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பான அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், தூத்துக்குடி டீன் திருவாசகமணி பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவர் விருதுநகர் மருத்துவக் கல்லூரி டீனாக மாற்றப்பட்டார்.

அவருக்குப் பதிலாக விருதுநகர் டீன் ரேவதி பாலன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டார்.