சென்னை,

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 81 லட்சம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.

மத்திய மாநில அரசுகள் தற்போது பெரும்பாலான பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதன் காரணமாக, இளைஞர்களின்  அரசு வேலை என்ற கனவு  காணல் நீராக மாறி வருகிறது.

ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு  வேலை பெற, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். தமிழகத்தில் கடந்த மாதம் வரை 82 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்கா பதிவு செய்து காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக, வேலை வாய்ப்பு அலுவலகங்களில், எத்தனை லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று ஆய்வு செய்யப்பட்டது.

இதில்,  தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 81 லட்சத்து 77 ஆயிரத்து 472 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.  (ஏறக்குறைய 82 லட்சம் பேர்)  இவர்கள் வேலை இல்லாமல் அரசு பணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில்  21 லட்சம் பேர் 23 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் என்றும், 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்  29 லட்சம் பேர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவர்களில்  பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஏறக்குறைய 4 லட்சம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள்.

இந்த 4 லட்சம் ஆசிரியர்களில் 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் முதுகலை படிப்பு முடித்த ஆசிரியர்கள். சட்டம் படித்தவர்களில் 216 பேரும், மருத்துவம் படித்தவர்களில் 784 பேரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.