புயல் சீரமைப்பு பணி: உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை! எடப்பாடி அறிவிப்பு

--

சென்னை:

ஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மின் கம்பங்கள் மற்றும் மின் பணிகள் சீரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக  உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

16.11.2018 அன்று அதிகாலை கஜா புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. இந்த அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. எனினும், புயலின் தாக்கத்தினால், கால்நடைகள், வீடுகள், பயிர்கள், மின்கம்பங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன.

புயலின் கடுமையான தாக்கத்தினால் 1,13,566 மின் கம்பங்கள், 1,082 மின் மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் சேதமடைந்தன. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, சேதமடைந்த மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீர் செய்யும் பணியில் சிறப்பாக ஈடுபட்டி ருக்கும் 24,941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை நான் மனதார பாராட்டுகிறேன், அவர்களது பணி மெச்சத்தக்கது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கோகூர் கிராமத்தைச் சேர்ந்த வயர்மேன் சண்முகம், 16.11.2018 அன்று மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 20.11.2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், களமாவூர் கிராமத்தில், மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 23.11.2018 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

கஜா  புயலின் தாக்கதினால் சேதமடைந்த மின் கம்பங்களை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்கம்பம் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 13 லட்சம் ரூபாயும்; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும் என மொத்தம் தலா 15 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்பத்தினர் தலா ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.