ஒகி புயலில் மாயமான மீனவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு பணி: ஆணையை வழங்கினார் எடப்பாடி

சென்னை:

குமரி மாவட்டத்தை சின்னாப்பின்னமாக்கிய ஓகி புயல் காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்க சென்று இன்று வரை கரை  திரும்பாமல்  மாயமான மீனவர்கள் குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார்.

கடந்த 2017ம் ஆண்டு  நவம்பர் 30ந்தேதி வங்க கடலில் உருவான ஓகி புயல் வங்க கடலோர பகுதியான கன்னியா குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்டது. மாவட்டத்தில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திய இந்த புயல் குறித்து மத்திய, மாநில அரசுகள் சரியான தகவல்கள் கொடுக்காததால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் பாதிப்புக்குளாகினர்.

இவர்களில் 500க்கும் மேற்பட்டோர் திரும்பவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், அரசு அறிக்கைபடி 177 மீனவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு அவர்கள்  2 மாதங்களுக்கு மேலாகியும் தெரியாத நிலையில், அவர்கள் உயிரிழந்து விட்டதாக கருதி, பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினருக்கு ரூ.20 லடசம்  நிதி வழங்கப்பட்டது.

ஓகி புயல் காரணமாக  கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களில் ஒகி புயலினால் பாதிக்கப்பட்ட136 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் அரசு நிறுவனங்களில் பணிபுரிய பணிநியமன ஆணைகள் வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி முதற்கட்டமாக மாயமான மீனவர்களின் குடும்பங்களை சேர்ந்த 10 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கினார்.