செப்டம்பர் 1 முதல் அரசு நூலகங்கள் திறக்கப்படும்… அமைச்சர் தகவல்

ஈரோடு: செப்டம்பர் 1 முதல் அரசு நூலகங்கள் திறக்கப்படும் என்றும்,  சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் நலன் கருதி திறக்கபட இருப்பதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு  நஞ்சகவுண்டன் பாளையம் பகுதியில்,  ரூ.10 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டிக்கும்,  பூஞ்சாங்காடு பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டிக்கும் அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து,   ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை, வடிகால், சிறுபாலங்கள் அமைக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னன்ர செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வு தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்பதே அண்ணா திமுக அரசின் நிலைபாடு. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து வலியுறுத்தி வருகிறார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ்கள் கால அவகாசம் 7 ஆண்டு என்பது தற்போது காலநீட்டிப்பு செய்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி முடிவு செய்வார். அதிக கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நூலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நூலகங்கள் திறப்பு

இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வு வருவதால் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாணவ மாணவிகளின் நலன் கருதி முதலமைச்சர் உத்திரவின் பேரில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நூலகங்களும் திறக்கப்படும். சிவில் சர்வீல் தேர்வுகளுக்காக தனியார் நிறுவனங்கள் மூலமாக மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

கல்வித் தொலைக்காட்சி மூலமாக மாணவ மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மலைக்கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் கல்வித் தொலைக்காட்சியின் மூலம் சிறப்பான கல்வி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு செய்த மாணவ மாணவிகள் சான்றிதழ் பெற்றவர்கள் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.