கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி: சட்டமன்றத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை:

கிருஷ்ணகிரியில் விரைவில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  கேள்வி நேரத்தின் போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மாநில அரசு கொள்கையின்படி மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் இந்த கல்வியாண்டில் கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கூறினார்.

ஏற்கனவே கிருஷ்ணகிரி பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், கிருஷ்ணகிரியில் மருத்துவக்கல்லூரி உடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில்,  கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

அமைச்சர் விஜய பாஸ்கரின் இந்த அறிவிப்புக்கு கிருஷ்ணகிரி மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.