Random image

“அரசுசாங்கப் பணம் என் பணம் போலத்தான்!”   தி.மு.க எம்.எல்.ஏ.

ரசாங்கப் பணம் என் பணம் போலத்தான்” என்று ஓப்பனாக பேசிய தி.மு.க எம்.எல்.ஏ-வின் ஆடியோ, சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

நிலமில்லாத ஏழை மக்களுக்குக் கறவைமாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. அந்தத் திட்டத்தில் தனது கட்சிக்காரர்களை ஏன் சேர்க்கவில்லை என்று ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், கால்நடை மருத்துவ அதிகாரி முருகு என்வருடன் ஆத்திரத்துடன் பேசும்  செல்போன் ஆடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அந்த 10.17 நிமிட செல்போன் ஆடியோ உரையாடல் இதோ..

எம்.எல்.ஏ. கார்த்திகேயன்: “அந்த மாடு கொடுக்கற பிரச்னை என்ன சார் அது… லிஸ்ட்டில் தி.மு.க.காரங்க பேரே இல்லைனு சொல்றாங்க. எங்க ஆளுங்களுக்கும் குடுக்கனும்ல சார்?.”

டாக்டர் முருகு: “தெரியலை சார். தேர்வுக் குழு உறுப்பினர் போல அந்த ஊர் வி.ஏ.ஓ. யாருக்கெல்லாம் நிலம் இல்லையென்று சான்றிதழ் தருகிறாரோ…..”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன்: (குறுக்கிட்டு) “அந்த எல்லா விபரமும் எனக்குத் தெரியும். எல்லா இடத்துலயும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் எனக்கு போன் செய்து உங்க லிஸ்ட் எது இருந்தாலும் குடுங்க சார் அதையும் சேர்த்துக்கறோம்னு சொல்லி, எங்ககிட்ட லிஸ்ட் வாங்கி சேர்த்துதான் கொடுக்கறாங்க.”

டாக்டர் முருகு: “அன்னைக்கு அங்கேயே தி.மு.ககாரங்க, அ.தி.மு.க.காரங்க எல்லாருமே வந்தாங்க சார்…”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன்: “நான்தானே எம்.எல்.ஏ? என்னிடம் லிஸ்ட் கேட்டிருக்கணும்ல…? யாருக்குத் தரணும்… என்ன பொசிசன்னு என்கிட்ட கேட்டிருக்கணும்ல?

டாக்டர் முருகு:  “அன்னைக்கு தி.மு.க, அ.தி.மு.க எல்லாருமே கரை வேட்டிலாம் கட்டிக்கிட்டு   எல்லாருமே வந்தாங்க சார்…”

எம்.எல்.ஏ கார்த்திகேயன்: ”லாரி நிறைய கலெக்டெர் ஆபீஸ்ல போயி எங்க ஆளுங்கல்லாம் நிக்கப்போறாங்க.”

டாக்டர் முருகு: : “சரிங்க சார்.. அதனால என்ன இருக்கு? நிற்கட்டும் சார்…”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன் : “என்னால உங்க உயரதிகாரிங்ககிட்ட பேச முடியுது. உங்ககிட்ட பேச முடியல.”

டாக்டர் முருகு: “சார் அப்படிலாம் ஒண்ணும் இல்லை. நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்கறீங்களா? உண்மையிலே, அந்த ஊரில் நான் பிறந்து வளந்தவன் கிடையாது. என் சொந்தக்காரங்க யாருமே இல்லை. அன்றைய தினம் வி.ஏ.ஓ.  ஊர் முக்கிய பிரமுகர்கள்…”

எம்.எல்.ஏ கார்த்திகேயன் (குறுக்கிட்டு): “நான் கேட்கிறது மற்ற ஊரில் இருந்தெல்லாம் டாக்டர்கள் எனக்கு போன் செய்து, சார் இப்படி ஒரு ஸ்கீம் வந்திருக்குது. தேர்வுசெய்றோம்,  இப்படிலாம் நடக்குதுனு என்கிட்ட சொல்றாங்க. எம்.எல்.ஏ என்கிற முறையில், நீங்க எனக்கு தகவல் தெரிவிச்சிருக்கணும்தானே?

டாக்டர் முருகு: “சார், நீங்கள் பெரிய ஆள். உங்ககிட்ட நான் பேசுவது சரியாக இருக்காது. எங்க துணை இயக்குநர் உங்ககிட்ட பேசுவார்னு நினைச்சுட்டிருந்தேன் சார்.”

எம்.எல்.ஏ கார்த்திகேயன் : ”ஏன் நீங்க சொல்லக் கூடாதா என்ன ?”

டாக்டர் முருகு : “அப்படி இல்லை சார். அது முறையா இருக்குமானு தெரியலை. எங்க மேலதிகாரி சொன்னால்தான் சரியா இருக்கும்னு நினைச்சுட்டேன் சார்.”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன்: “கீழப்பாடில அண்ணாமலைனு ஒருத்தர் இருக்காரு. அவருகிட்ட பேசி, அவரு குடுக்கற லிஸ்ட்டை வாங்கி வி.ஏ.ஓ கிட்ட சர்ட்டிஃபிகேட் வாங்கி அதுல சேருங்க.”

டாக்டர் முருகு: “சார்… போன வாரமே ஆபீஸ்ல லிஸ்ட் கொடுத்துட்டேன் சார்.”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன் : “உங்க விளக்கம் எல்லாம் எனக்கு தேவை இல்லை டாக்டர்.”

டாக்டர் முருகு: “சார், நான் சொல்றதையும்  கேளுங்க சார் கொஞ்சம்.”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன்: “நீ சரியா செஞ்சிருந்தா  நான் கேட்டிருப்பேன். நீதான் சரியா செய்யலையே. எனக்குத் தகவல் சொல்லலையே. நாளைக்கு காலைல எல்லோரும் சாலை மறியல்ல உட்காருவாங்க. கலெக்டரெல்லாம் வரட்டும். நடவடிக்கை எடுத்தப்புறம் அடுத்த கட்டத்தைப் பார்ப்போம்”

டாக்டர் முருகு: ”சார், தாராளமா சந்தோஷமா செய்யுங்க சார்.   தேர்வுக் குழுவுல என்னுடைய பங்கு எதுவும் இல்லை. அவங்க போட்டுக் குடுத்த தீர்மானக் குழு லிஸ்ட்டை எங்க ஆபீஸில் நான் கொடுத்துட்டேன். அதுக்குமேல நீங்க செய்யுங்க சார். நீங்க நினைச்சா  எல்லாத்தையும் மாத்தலாம் சார்”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன் : ”கீழப்பாடில அண்ணாமலைனு ஒருத்தர் இருக்காரு. அவருக்கு போன் பண்ணி என்ன பிரச்னை. ஏன் இது பிரச்னையாகிறது என்று விசாரிங்க.”

டாக்டர் முருகு: சரி சார். ஆனா, இன்னைக்கு உங்ககிட்ட வர்றவங்க அன்னைக்கே என்னிடம் தகுதியானவங்க விடுபட்டுட்டாங்கன்னு சொல்லியிருக்கலாமே சார்… ”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன்:   “நான் தனே எம்.எல்.ஏ,?  எங்கிட்டதான வந்து சொல்லுவாங்க. மறிச்சி மறிச்சி  விளக்கம் சொல்லிட்டு இருக்காத.. புரியுதா?  ஊருல பிரச்னை வருதுன்னு சொல்லிட்டிருக்கேன்… நீ என்னவோ விளக்கம் சொல்லிக்கிட்டிருக்க! ஒரு பிரச்னை சொல்றேன். சம்பந்தப்பட்டவங்களைக் கூப்பிட்டு, ஏன் சார் விடுபட்டுச்சு? என்ன பிரச்னைனுதானே நீ கேட்கணும்…”

டாக்டர் முருகு (கொஞ்சம் கோபமாக) : ”நான் என் சொந்தப் பணத்தைக் கொடுப்பதுமாதிரி பேசறீங்க. இது அரசுப் பணம் சார்!

எம்.எல்.ஏ கார்த்திகேயன்: ”என் பணம் போலத்தான் அது. அரசாங்கப் பணம் அப்படிங்கிறது  என்னுடைய பணம் மாதிரித்தான்.  அரசாங்கத்தோட  பிரதிநிதி நான் புரியுதா?”

டாக்டர் முருகு: “சார் என்னுடைய கடமையை நான் செஞ்சுட்டேன். என் மேலதிகாரிங்ககிட்ட பேசுங்க சார் நீங்க.”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன் : “நீ காசு வாங்கிட்டு கொடுத்துடுவ. நான் எதுவும் கேட்கக் கூடாதா?“

டாக்டர் முருகு : ”ஒரு ரூபாய் நான் காசு வாங்கியிருந்தால் என்னை காரித் துப்புங்க. செருப்பால் அடிங்க. அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படுறவன் நான் இல்லை.”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன் : ”ஒரு ஆளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கீங்களாமே நீங்க?”

டாக்டர் முருகு: “அதை நீங்க நிரூபிச்சிட்டீங்கன்னா, இந்த வேலையிலையை விட்டோ போயிடறேன்.  யாருக்கெல்லாம் நிலம் இல்லை என்று வி.ஏ.ஓ கொடுத்தாரோ அவர்களுக்கு மட்டும்தான் கொடுத்தோம். நீங்க சொல்லி யாராவது சொன்னால்தான் உண்டு. அப்படி இல்லாம யாராவது ஒருத்தவங்க நான் காசு வாங்குனதா சொல்லட்டும், நான் செத்தே போயிடறேன். 2012ல் இருந்து நேர்மையா, நாணயமா கொடுத்துக்கிட்டு வர்றேன். சிபிஐ விசாரணைகூட வரட்டும். அதுக்காக நீங்க   மரியாதை இல்லாம பேசுறது… வாயா போயானு பேசறதை எல்லாம்   வேறு யாருகிட்டையாவது வச்சிக்கங்க.”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன் : ”யோவ்… நீ பப்ளிக் சர்வன்ட் யா… பப்ளிக்கு வேலை செய்யவேண்டியது உன்னுடைய கடமை. உன்னைக் கண்காணிக்கிறது என் வேலை.”

டாக்டர் முருகு: ”தாராளமா கண்காணிங்க சார். என்னுடைய கடமை என்னவோ அதை நான் சரியா செய்துட்டேன்.”

எம்.எல்.ஏ. கார்த்திகேயன் : “சரி உன் மேலதிகாரி நம்பரை கொடு. அவர்கிட்ட நான் பேசிக்கிறேன்”

டாக்டர் முருகு: “அஞ்சி நிமிசம்  கழிச்சி போன் பண்ணுங்க. இந்த செல்லில்தான் இருக்கிறது எடுத்துத் தர்றேன்”

–   இதோடு  உரையாடல் முடிகிறது.