சிம்லா:

தெருநாய்கள் கடித்துக் குதறியதில் சிறுவன் பலியான சம்பவம் இமாசல பிரதேச மாநிலத்தை அதிரவைத்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து இமாசல பிரதேசத்தின் சிர்மாவர் மாவட்டத்தில் தொழிலாளி ஒருவர் வசித்து வந்துள்ளார்.  இவரது ஏழு வயது மகன் அருகிலுள்ள அமர்கோட் கிராமத்தில் உள்ள சந்தைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்திருக்கிறான்.

இந்த நிலையில், அவனது அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் அங்கு ஓடிவந்தனர். அங்கு சிறுவனை ஆறுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து குதறி கொண்டு இருந்தன.   அவனை மீட்க சென்றவர்களில் மூவரையும் நாய்கள் கடித்துக்குதறின.

சிறுவனின்  தலை, தொண்டை, கழுத்து மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் நாய்கள் பலமாக கடித்துக் குதறின. மக்கள் பெருமளவில் கூடியதும் நாய்கள் தப்பி ஓடின.

பிறகு சிறுவனை சிகிச்சைக்காக கிராமத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டான்.

இதுபற்றி அமர்கோட் கிராம தலைவர் ராகேஷ், “மக்களை தெரு நாய்கள் தாக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தேம். ஆனால் புகார் மீது நடவடிக்கை எதுவுமில்லை. இப்போது ஒரு உயிர் பலியாகிஇருக்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதி மக்கள்  தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மறுத்துவருகிறார்கள்.