மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜார்கண்ட்:
கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

 

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சமீப காலமாக கொரோன பாதிப்பு பல்வேறு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்தும் முயற்சியில் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
ஊரடங்கு நீட்டிப்பு:

அதன்படி சமீபத்தில் மேற்கு வங்க அரசு ஊரடங்கை வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் அரசும் ஊரடங்கை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், கொரோனா நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத செயல்பாடுகள் / கண்காட்சிகள் மற்றும் கூட்டங்கள் அனைத்தும் தடைசெய்யப்படுகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், கல்வி, பயிற்சி நிறுவனங்கள், சினிமா, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் என அனைத்தும் மூடப்படும்.

போக்குவரத்து சேவை ரத்து:

மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், லாட்ஜ்கள், தர்மசாலாக்கள், உணவகங்கள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் மற்றும் ஸ்பாக்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகளும் மூடப்படும். அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, மாநிலம் முழுவதும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்படும்.

பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் போக்குவரத்தின் போது பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கபடுகிறது. பொது இடங்களில் குறைந்தபட்சம் ஆறு அடி தூரம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.  ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 2,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.