சிறு குறு தொழில் முனைவோர்கள் 150 கி.வா. மின் இணைப்பு பெறலாம்! தமிழக அரசு

சென்னை: சிறு குறு தொழில் முனைவோர்கள் இனிமேல்  150 கி.வா. வரை மின் இணைப்பு  பெற லாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக மின்சார பகிர்மான விதித்தொகுப்பில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.

தமிழகத்தில் சிறுகுறுதொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில்,  தாழ்வழுத்த மின்னி ணைப்பு பெறுவதற்கு தற்போது உள்ள மின் வரம்பு,  112 கிலோ வாட்டிலிருந்து 150 கிலோ வாட்டாக உயர்த்தி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிர்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின்சார வழங்கல் விதித்தொகுப்பிலும் மின்சார பகிர்மான விதித்தொகுப்பிலும் திருத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,

தொழில் மற்றும் இதர மின் நுகர்வோர்கள் தாழ்வழுத்த மின் இணைப்பை, 150 கிலோ வாட் மின்தேவை வரையில் பெற்றுக் கொள்ளலாம்.

112 கிலோ வாட் மற்றும் அதற்கு குறைவான மின்தேவையுடன் தற்போதுள்ள நுகர்வோர்களுக்கு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தாழ்வழுத்த மின் கட்டணங்களும் விதிகளும் தொடரும்.

112 கிலோ வாட்டிற்கு மேல் மின்தேவை உள்ள நுகர்வோர்கள், தாழ்வழுத்த மின் இணைப்பை, 150 கிலோ வாட் வரை பின் வரும் நிபந்தனைகளுடன் பெற்றுக் கொள்ளலாம்:

தங்கள் வளாகத்திற்குள் மின்மாற்றி அமைப்பதற்கான இடத்தைத் தர வேண்டும்

உயரழுத்த மின் இணைப்பிற்குண்டான மின்தேவை மற்றும் மின் நுகர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்,

மின்மாற்றி அமைப்பதற்குண்டான பொருள் மற்றும் நிறுவுதல் செலவுகளை மின்வழங்கும் நிறுவனம் ஏற்கும்.

நுகர்வோர் வளாகத்திற்குள் அமைக்கப்படும் மின் கடத்திகளுக்குண்டான பொருள் மற்றும் நிறுவுதல் செலவுகளை விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும்.

முடிந்த இடத்திலெல்லாம் ஒற்றைக் கம்ப வகை மின்மாற்றி அமைப்பை நிறுவி இடத்தையும் செலவையும் குறைக்கலாம்.

அனுமதிக்கப்பட்ட உச்ச மின்தேவையை மீறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதத் தொகை கொள்கையளவில், 112 கிலோ வாட் வரை உள்ள நுகர்வோர்களுக்கும் 112 கிலோ வாட்டிற்கு மேல் 150 கிலோ வாட் வரை உள்ள நுகர்வோர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.

150 கிலோ வாட் உச்ச மின்தேவையை 3 முறையோ அதற்கும் மேலோ மீறும் பட்சத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பை உயரழுத்த மின் இணைப்பாக மாற்ற, நுகர்வோர்க்கு அறிவிப்பு வழங்கப்படும்.

இந்தத் திருத்தம் வருவதற்கு முன், உயரழுத்த மின் இணைப்பைப் பெற வசதியில்லாமல் 112 கிலோ வாட் மி்ன்தேவையை மீறி் பெரும் தொகையை அபராதமாக கட்டி வந்த நுகர்வோர்கள், இனிமேல் 150 கிலோ வாட் வரை மி்ன்தேவையை கூடுதலாகப் பெற்று அபராதத்தைத் தவிர்க்கலாம்.

மின்மாற்றியை மின்தேவை உள்ள நுகர்வோர் இடத்திலேயே அமைப்பதினால் மின்னிழப்பு பெருமளவு குறையும், மின் அழுத்தம் சீராகும், மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை வலுப்படும்.

தாழ்வழுத்த மின் கடத்திகளின் நீளம் குறைவதால், உயரழுத்த தாழ்வழுத்த விகிதம் மேம்படுவதுடன் நுகர்வோர்களுக்கு ஏற்படும் மின்தடைகள் பெருமளவில் குறையும்.

தமிழ்நாடு அரசு நாளிதழில் 01.07.2020 அன்று வௌியிடப்பட்ட மேற்கண்ட திருத்தத்தின் கூடுதல் விபரங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் (www.tnerc.gov.in) காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.