சென்னை:

சென்னை புத்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புத்தகக் கண்காட்சிக்கு  தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

ஆண்டுதோறும் நடைபெறும் தென்னிந்தியப் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. வரும் 21ந்தேதி நடைபெற உள்ள  இந்த 43வது புத்தக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை நேற்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதையடுத்து, அங்கு  தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள  கீழடி தொல்பொருள் அகழ்வாய்வு கண்காட்சியையும்  திறந்து வைத்து, அதில் இடம்பெற்றுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.

தொடர்ந்த, , ஒரிசாவைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த திருவள்ளுவரின் மணல் சிற்ப உருவத்தையும் மக்களின் பார்வைக்கு திறந்து வைத்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில்  உரையாற்றிய முதல்வர், புத்தகம் இல்லை எனில் மனித குலம் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்றும்,  தமிழக அரசு சார்பில் 25 கோடி ரூபாய் செலவில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும்கூறினார்.

மேலும்,  மக்களிடம்  வீட்டிற்கு ஒரு நூலகம் அமைக்கும் சிந்தனை மனதில் உருவாக வேண்டும் என்று கூறியவர், அடுத்த ஆண்டு முதல் புத்தக கண்காட்சிக்கு 75 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்து அப்ளாஸ் பெற்றார்.

நேற்று தொடங்கப்பட்டுள்ள கண்காட்சியில் மொத்தம் 700 அரங்குகள் இடம்பெற உள்ளது.  15 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற இருப்பதாக கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த கண்காட்சி வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும்,  விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரையும் நடைபெறும். இந்தக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 மட்டுமே.