கவுகாத்தி:

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் முன்னதாக அலுவலகம் வர அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அஸ்ஸாம் பாஜக முதல்வர் சர்பானந்த சோனவால் கூறுகையில், ‘‘நாட்டிலேயே அஸ்ஸாமில் தான் சூரியன் முதலில் உதிக்கிறது. அரசு ஊழியர்கள் பணிக்கு முன்னதாகவே வர வேண்டும். மக்களை காத்திருக்க செய்யக் கூடாது. தாமதமாக அலுவலகம் வரும் கலாசாரத்தை மாற்ற வேண்டும். வருங்கால தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிலையில், அஸ்ஸாம் அமைச்சரவை நேற்று கூடியது. இதில், ‘‘அரசு ஊழியர்களின் பணி நேரம் காலை 10 மணிக்கு பதிலாக 9:30 மணிக்கே தொடங்கும். மாலை 5 மணிக்கு பணி முடியும் என்பதில் மாற்றம் இல்லை. இந்த மாற்றம் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு  வருகிறது,’’ என முடிவு செய்யப்பட்டது.  அரசு ஊழியர் சங்கங்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர். ஊழியர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளன.